மாநாட்டில் அரங்கம் அதிர பேசிய விஜய்.. நடுவில் சொன்ன குட்டி ஸ்டோரி இதுதான்..!!
தவெக மாநாட்டில் குட்டிக்கதை ஒன்றைச் சொன்ன விஜய், நீங்கதான் ராஜா.. நீங்க தேர்வு செய்யப்போகும் அந்த தளபதி யார்? என்று பேசினார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) இரண்டாவது மாநில மாநாடு மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாரப்பத்தி கிராமத்தில் இன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. கட்சித் தலைவர் நடிகர் விஜய் தலைமையில் நடந்த இம்மாநாட்டில், லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர். 506 ஏக்கர் பரப்பளவில் அமைந்த மாநாட்டுத் திடலில், 1.7 லட்சம் இருக்கைகள், 140 எல்.இ.டி திரைகள், 100க்கும் மேற்பட்ட கழிப்பறைகள், 5 லட்சம் குடிநீர் பாட்டில்கள் உள்ளிட்ட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.
கூடியிருந்த தொண்டர்கள் மத்தியில் ராம்ப் வாக் நடந்த விஜய், பின்னர் அரங்கம் அதிர பேசினார். “மாற்று சக்தி இல்லை, நாமே முதன்மை சக்தி” என உரத்த குரலில் அறிவித்த விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலில் தவெகவின் புரட்சிகர மாற்றத்தை உறுதி செய்தார். விஜய் தனது உரையில், திமுக மற்றும் பாஜக அரசுகளை கடுமையாக விமர்சித்தார். “மக்கள் விரோத ஆட்சியை அடுத்த தேர்தலில் வாக்குகள் மூலம் வீழ்த்துவோம்” என்று அவர் கூறியது, கூட்டத்தில் பெரும் ஆரவாரத்தை எழுப்பியது.
இதையும் படிங்க: 'வாகைசூடும் வரலாறு திரும்புகிறது'.. தெறிக்கவிடும் தவெக மாநாட்டின் கட்அவுட்.. இனி ஆட்டம் வெறித்தனம்தான்..!!
மதுரையை “முத்தமிழ் வளர்த்த புனித பூமி” என வர்ணித்த அவர், கொள்கை மற்றும் அரசியல் எதிரிகளை சமரசமின்றி எதிர்க்கும் தவெகவின் நோக்கத்தை வலியுறுத்தினார். மேலும், 1967 மற்றும் 1977 ஆண்டுகளில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களைப் போல, 2026ல் தவெக தமிழகத்தில் புதிய வரலாறு படைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். மாநாட்டில் கூட்டணி குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விஜய் அதைத் தவிர்த்து, மக்கள் நலனுக்காகவே தவெகவின் பயணம் தொடரும் எனக் கூறினார்.
இதனிடையே தவெக மாநாட்டில் விஜய் தனது வழக்கமான பாணியில் குட்டிக் கதை ஒன்றை கூறினார். ஒரு குட்டிக்கதை சொல்றேன் என்று ஆரம்பித்த விஜய், ஒரு நாட்டில் ஒரு ராஜா தனக்கு பக்கபலமாக இருப்பதற்காக ஒரு தளபதியை தேடுகிறார். சரியான தகுதிகளோடு ஒரு 10 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். அதில் ஒருவரை மட்டும்தான் தேர்வு செய்ய முடியும். எனவே அவர்களுக்கு ஒரு டெஸ்ட் வைக்கிறார். அந்த 10 பேரிடமும் விதை நெல்லை கொடுத்து அதனை நன்றாக வளர்த்துக் கொண்டு வரவேண்டும் எனச் சொல்லி 3 மாதங்கள் கழித்து வாங்க என்று கூறி அனுப்பி வைக்கிறார்.
3 மாதம் கழித்து வரும்போது அதில் ஒருவர் ஆள் உயரத்துக்கு வளர்த்திருந்தார். ஒருவர் தோள் உயரத்துக்கு வளர்த்திருந்தார். 9 பேர் வளர்த்திருந்தார்கள். ஒருவர் மட்டும் வெறும் தொட்டியை கொண்டு வந்திருந்தார். என்ன என்று கேட்டதற்கு, நானும் தண்ணீர் ஊற்றிப் பார்க்கிறேன், உரம் வைத்துப் பார்க்கிறேன்.. வளரவே மாட்டேன் என்கிறது ராஜா எனக் கூறினார். அவரை கட்டியணைத்த ராஜா, இனி இனிதான் என் தளபதி எனக் கூறினார். ஏனென்றால், அந்த 10 பேரிடமும் ராஜா கொடுத்தது அவித்த நெல். அது முளைக்கவே முளைக்காது.
அந்த 9 திருட்டுப் பயல்களும் என்ன பண்ணியிருக்காங்கன்னா, வேறு விதை நெல்லை வாங்கி வளர்த்து ராஜாவையும், மக்களையும் ஏமாற்றி உள்ளனர். ஒருவர் மட்டும் உண்மையை போட்டு உடைத்துவிட்டார். ஒரு நாட்டுக்கு திறமை எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்கு உண்மையும் நேர்மையும் முக்கியம். இப்போது நீங்கள் எல்லோரும் தான் ராஜா. நீங்கள் தேர்ந்தெடுக்கப்போகும் அந்த தளபதி யார்?" என்று பேசினார்.
இதையும் படிங்க: 2வது மாநாட்டிற்கு ரெடியாகும் தவெக.. வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட கட்சி தலைமை..!!