×
 

கைநழுவும் தலைமை பொறுப்பு! பவரில் பாஜக! டெல்லி ரிமோட் கண்ட்ரோலால் எடப்பாடி எரிச்சல்!

தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைமை அ.தி.மு.க., என்பது பெயரளவுக்கு இருப்பதால், அதன் பொதுச்செயலர் பழனிசாமி அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) உள்ளே பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் என்டிஏ கூட்டணிக்கு தான் தலைமை என்று மேடைதோறும் பேசி வருகிறார். ஆனால் உண்மை நிலை வேறு என்று அதிமுக நிர்வாகிகள் சிலர் வெளியிட்ட தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

அதிமுக நிர்வாகிகள் கூறுகையில், பாஜக மேலிடம் தான் எடப்பாடி பழனிசாமியை கூட்டணிக்கு இழுக்க 'நீங்கள்தான் தமிழக என்டிஏ தலைவர்' என்று சொல்லி சம்மதம் வாங்கியது. ஆனால் பாஜக மேலிடம் எங்கும் இதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளவில்லை. 

கூட்டணி அமைப்பு, தொகுதி பங்கீடு போன்ற முக்கிய விவகாரங்களில் பழனிசாமி கடுமையாக நடந்து கொண்டதால், கூட்டணி கட்சிகள் அதிருப்தியடைந்தன. இதனால் பாஜக மேலிடம் நேரடியாக கூட்டணி பேச்சுவார்த்தைகளை கையில் எடுத்தது.

இதையும் படிங்க: அப்பாவை ஆட்டையில சேக்காதீங்க!! அன்புமணி எதிர்ப்பால் பாஜக மறுப்பு! திமுக கைவிட்டதால் சிக்கலில் ராமதாஸ்!

பிரதமர் மோடி தமிழகம் வருவதற்கு முன்பாகவே, மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் சென்னைக்கு வந்து வேகமாக கூட்டணியை வலுப்படுத்தினார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மட்டுமே பழனிசாமியுடன் நேரடியாக பேசி கூட்டணியில் இணைந்தார். 

மற்ற கட்சி தலைவர்கள் பெரும்பாலும் பாஜக தலைவர்களை சந்தித்தே இணைந்தனர். புரட்சி பாரதம் ஜெகன் மூர்த்தி தவிர, பாரிவேந்தர், ஏ.சி. சண்முகம், ஜான் பாண்டியன் போன்றோர் தாமரை சின்னத்தில் போட்டியிட விரும்புவதும் பழனிசாமியின் கடுமையான அணுகுமுறையால் தான் என்று கூறப்படுகிறது.

ஓ.பன்னீர்செல்வம், ராமதாஸ், கிருஷ்ணசாமி, தேமுதிக போன்ற கட்சிகளை என்டிஏ-வில் இணைக்க பாஜக தான் தீவிர முயற்சி எடுத்து வருகிறது. அதிமுக இதில் பெரிதாக ஈடுபடவில்லை. இதனால் தமிழக என்டிஏ கூட்டணிக்கு பாஜகவே தலைமை தாங்கும் நிலை உருவாகியுள்ளது. மதுராந்தகம் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி அதிமுகவை பெரிதாக குறிப்பிடாமல் பேசியதும் இதற்கு எடுத்துக்காட்டு என்று அதிமுக வட்டாரங்கள் சொல்கின்றன.

தலைமை பொறுப்பு கை நழுவுவதால் எடப்பாடி பழனிசாமி பெரும் மன உளைச்சலில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுகவினர் பலர் இதை உறுதிப்படுத்துகின்றனர். பாஜகவின் இந்த அணுகுமுறை 2026 தேர்தலில் என்டிஏ அணியின் வெற்றி வாய்ப்பை பாதிக்குமா? அல்லது பழனிசாமி புதிய உத்தியுடன் வருவாரா? அரசியல் வட்டாரங்கள் ஆவலுடன் காத்திருக்கின்றன.
 

இதையும் படிங்க: கூட்டணி ஆட்சி, 3 அமைச்சர் பதவி!! எடப்பாடியிடம் டீல் பேசிய அமித்ஷா!! துறைகள் கன்பார்ம்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share