மீண்டும் மா.செ கூட்டத்தை கூட்டும் எடப்பாடி பழனிசாமி! எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தரப்பை முந்திக்கொள்ள திட்டம்!
மாவட்ட செயலர் கூட்டத்தை, மீண்டும் கூட்ட, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.
சென்னை: அ.தி.மு.க. பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி, கட்சியில் ஏற்பட்டுள்ள உள்கட்சி பூசலை அடக்க மீண்டும் மாவட்ட செயலர்கள் கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளார்.
தொடர் தேர்தல் தோல்விகளைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் சண்முகம் தலைமையில் 25 எம்.எல்.ஏ.க்கள் அணி திரண்டு எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகக் களமிறங்கியுள்ளனர். பொதுக்குழு கூட்டத்தைக் கூட்டி தோல்விக்கான காரணங்களை விவாதிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்கு முன்பு, தனது ஆதரவாளர்களை ஒன்றிணைக்கும் வகையில் சென்னையில் மாவட்ட செயலர்கள் கூட்டத்தை கடந்த 19-ம் தேதி பழனிசாமி கூட்டினார். ஆனால், 20 மாவட்ட செயலர்கள் மற்றும் 43 அமைப்புச் செயலர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. எனினும், பெரம்பலூர் மாவட்ட செயலர் தமிழ்ச்செல்வனின் பதவியை மட்டும் பழனிசாமி பறித்தார்.
இதையும் படிங்க: மு.க.ஸ்டாலினை தொடரும் கொளத்தூர் வழக்கு!! 13 ஆண்டுக்கு பின் ட்விஸ்ட்! சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் திடீர் விலகல்!
தற்போது முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசில் அமைச்சர் பதவி கிடைக்காததால் சண்முகம் அணி அதிருப்தியில் உள்ளது. இந்தச் சூழலை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், ஒவ்வொரு எம்.எல்.ஏ.க்களுடனும் தொலைபேசி மூலம் பேசி வருகிறார் பழனிசாமி. சண்முகம்-வேலுமணி தரப்பு அடுத்த காய் நகர்த்தும் முன்பு, கட்சியை தனது முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர பழனிசாமி முடிவு செய்துள்ளார்.
இதன் ஒரு பகுதியாக, விரைவில் மீண்டும் மாவட்ட செயலர்கள் கூட்டத்தை நடத்த உள்ளார். இந்த முறை மாநில நிர்வாகிகள் மற்றும் அணி செயலர்களையும் அழைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கூட்டத்துக்கு வராதவர்களை அடையாளம் கண்டு அவர்களது பதவிகளை பறிக்கவும் பழனிசாமி தரப்பு தீவிரமாக உள்ளது.
இதனிடையே, த.வெ.க. அரசுக்கு ஆதரவாக வாக்களித்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் பதவியை பறிக்க வேண்டும் என பழனிசாமி தரப்பு ஏற்கெனவே சபாநாயகர் மற்றும் ஆளுநருக்கு மனு அளித்துள்ளது. நேற்று அ.தி.மு.க. கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி சட்டசபை செயலரை சந்தித்து புதிய மனு ஒன்றை அளித்தார். அதில், தங்களுக்கு அதிக ஆதரவு இருப்பதாகவும், எதிரணியின் எண்ணிக்கை குறைந்துவிட்டதாகவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கு பதிலடியாக சண்முகம் மற்றும் வேலுமணி தரப்பினரும் சட்டசபை செயலரை சந்தித்து தங்களது மனுவை அளித்துள்ளனர். இந்த உள்கட்சி மோதல் அ.தி.மு.க.வில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: முதல் முறை அறநிலைய அமைச்சராக பிராமணர் நியமனம்! தவெக அமைச்சரவையில் அதிரடி காட்டிய விஜய்!