×
 

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு மீண்டும் டார்கெட்?! காங்கிரசில் இணைந்தார் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பேத்தி சமனா!

மறைந்த முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் பேத்தி சமனா, டெல்லியில் சோனியா காந்தி முன்னிலையில், காங்கிரசில் இணைந்தார்.

மறைந்த முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வெ.ரா. இளங்கோவனின் பேத்தியும், ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ. திருமகன் ஈ.வெ.ரா.வின் மகளுமான சமனா, காங்கிரஸ் கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். 

டெல்லியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி முன்னிலையில் நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரும் கலந்துகொண்டனர். இளங்கோவனின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது.

ஈ.வெ.ரா. இளங்கோவன் தமிழக காங்கிரஸ் அரசியலில் முக்கியப் பங்காற்றியவர். மூன்று முறை தமிழக காங்கிரஸ் தலைவராகவும், ஒரு முறை மத்திய அமைச்சராகவும், இரு முறை எம்.எல்.ஏ.வாகவும் பதவி வகித்தவர். அவரது மகன் திருமகன் ஈ.வெ.ரா. 2021 சட்டசபைத் தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 

இதையும் படிங்க: 'அபயஹஸ்தம்'? தெலுங்கானா தேர்தல் வாக்குறுதி என்னாச்சு? சோனியா காந்திக்கு மத்திய அமைச்சர் கேள்வி!

உடல்நலக் குறைவால் திருமகன் இறந்தபின் நடந்த இடைத்தேர்தலில் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரும் உடல்நலக் குறைவால் இறந்தபின் அத்தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் சந்திரமோகன் போட்டியிட்டு வென்றார்.

ஈரோடு கிழக்கு தொகுதியை திமுகவுக்கு ஒதுக்கியது காங்கிரஸ் ஆதரவாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இளங்கோவன் குடும்ப உறுப்பினரை அத்தொகுதியில் நிறுத்த வேண்டும் என்று ஆதரவாளர்கள் வலியுறுத்தினர். இதுகுறித்து தமிழக காங்கிரஸார் டெல்லி மேலிடத்தில் புகார் தெரிவித்தனர்.

வரும் 2026 சட்டசபைத் தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியை காங்கிரஸுக்கு ஒதுக்க வேண்டும் என்றும், இளங்கோவன் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை களமிறக்க வேண்டும் என்றும் டெல்லி மேலிடம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்நிலையில் சமனா காங்கிரஸில் இணைந்தது கட்சி வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சோனியா காந்தி முன்னிலையில் நடந்த இந்த நிகழ்ச்சி இளங்கோவன் குடும்பத்தின் அரசியல் பயணம் தொடர்வதற்கான அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. ஈரோடு கிழக்கு தொகுதியில் சமனா அல்லது குடும்ப உறுப்பினர் போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸ் கட்சியின் தமிழக அரசியல் உத்தியில் இது முக்கியமான நிகழ்வாகக் கருதப்படுகிறது. இளங்கோவன் ஆதரவாளர்கள் இதை வரவேற்றுள்ளனர்.

இதையும் படிங்க: நேரு ஆவணங்கள்ல அப்பிடி என்ன ரகசியம் இருக்கு? சோனியா காந்திக்கு மத்திய அமைச்சர் கேள்வி?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share