'அபயஹஸ்தம்'? தெலுங்கானா தேர்தல் வாக்குறுதி என்னாச்சு? சோனியா காந்திக்கு மத்திய அமைச்சர் கேள்வி!
'தெலுங்கானாவில் விவசாயிகள் உள்ளிட்டோருக்கு தேர்தலின் போது அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டதா' என, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாவுக்கு மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி கேள்வி எழுப்பியுள்ளார்.
தெலுங்கானா மாநிலத்தில் 2023 சட்டசபைத் தேர்தலின்போது காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி அளித்த ‘அபயஹஸ்தம்’ என்ற ஆறு உத்தரவாதத் திட்டங்கள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்று மத்திய கனிமவளத்துறை அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி கடும் விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து சோனியா காந்திக்கு அவர் திறந்த கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த 2023 தேர்தல் பிரசாரத்தில் சோனியா காந்தி ‘அபயஹஸ்தம்’ என்ற பெயரில் விவசாயிகள் உள்ளிட்டோருக்கு பயனளிக்கும் ஆறு முக்கிய திட்டங்களை உடனடியாக நிறைவேற்றுவோம் என்று உறுதியளித்தார்.
இந்த உத்தரவாதங்கள் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தன. தேர்தலில் வென்று முதல்வராக ரேவந்த் ரெட்டி பொறுப்பேற்று இரு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்று கிஷன் ரெட்டி குற்றம்சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க: நேரு ஆவணங்கள்ல அப்பிடி என்ன ரகசியம் இருக்கு? சோனியா காந்திக்கு மத்திய அமைச்சர் கேள்வி?
சமீபத்தில் முதல்வர் ரேவந்த் ரெட்டி சோனியா காந்தியைச் சந்தித்து ‘தெலுங்கானா எழுச்சி - 2047’ என்ற தொலைநோக்கு வளர்ச்சித் திட்ட ஆவணத்தை சமர்ப்பித்தார். இதைச் சுட்டிக்காட்டிய கிஷன் ரெட்டி, “புதிய எதிர்காலத் திட்டங்களைப் பேசுவதற்கு முன், தேர்தலின்போது அளித்த 420 அம்ச வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டனவா என்று சோனியா காந்தி ஆய்வு செய்தாரா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
“ரேவந்த் ரெட்டியிடம் இதுகுறித்து சோனியா கேள்வி கேட்டாரா? அளித்த வாக்குறுதிகளை கைவிட்டுவிட்டீர்களா என்று தெளிவுபடுத்த வேண்டும். அந்த 420 வாக்குறுதிகள் மூசி ஆற்றில் வீசப்பட்டுவிட்டனவா? அல்லது காந்தி பவனில் மண் தோண்டி புதைக்கப்பட்டுவிட்டனவா?” என்று கிஷன் ரெட்டி கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், “அபயமளிக்கும் கை அழிக்கும் கையாக மாறினால், அதிகாரத்தில் இருந்து தூக்கி எறியப்படும்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது மக்களை ஏமாற்றுவதாக உள்ளது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் ஆட்சியின் இரு ஆண்டு கால செயல்பாடுகள் குறித்து எதிர்க்கட்சியான பாஜக தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறது. இந்த திறந்த கடிதம் தெலுங்கானா அரசியலில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: குடியுரிமை கிடைக்கிறது முன்னாடி வாக்குரிமை எப்படி? டெல்லி கோர்ட் கிடுக்குப்பிடி கேள்வி?! சோனியா காந்திக்கு சிக்கல்!