நீங்க சொன்னா நாங்க கிளம்பிறனுமா! அரசு பங்களாவை காலி செய்ய மறுத்து அடம்பிடிக்கும் முன்னாள் அமைச்சர்கள்!
'அரசு பங்களாக்களை, உங்கள் இஷ்டப்படி ஒப்படைக்க முடியாது' என, பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம், முன்னாள் அமைச்சர்கள் தடாலடியாக கூறியுள்ளனர்.
சென்னை: தி.மு.க. ஆட்சி முடிவுக்கு வந்த நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர்கள் பங்களாக்களை காலி செய்யுமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டபோது, முன்னாள் அமைச்சர்கள் தடாலடியாக நடந்துகொண்டுள்ளனர். “உங்கள் இஷ்டப்படி அரசு பங்களாக்களை ஒப்படைக்க முடியாது” என அதிகாரிகளிடம் அவர்கள் கடும் கோபத்துடன் தெரிவித்துள்ளனர்.
கிரீன்வேஸ் சாலையில் அமைச்சர்கள் தங்குவதற்காக 60 பங்களாக்கள் உள்ளன. அமைச்சர்களின் குடியிருப்பு, அலுவலகம், பாதுகாவலர்கள் மற்றும் பணியாளர்கள் தங்கும் வசதிகள் இவற்றில் அடங்கும். கடந்த ஐந்து ஆண்டு தி.மு.க. ஆட்சியில் 23க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் இந்த பங்களாக்களை பயன்படுத்தினர். தங்கள் சொந்த செலவில் கட்டில், மெத்தை, ஃபிரிட்ஜ், டிவி, ஏசி உள்ளிட்ட வசதிகளை செய்துகொண்டனர். சில அமைச்சர்களின் குடும்பத்தினர் தோட்டங்களில் நாட்டுக்கோழி, பசுக்கள், வெளிநாட்டு நாய்கள் உள்ளிட்டவற்றை வளர்த்து வந்தனர்.
தேர்தலில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, புதிய அமைச்சர்களுக்கு இந்த பங்களாக்களை ஒதுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பங்களாக்களுக்கு பெயிண்ட் அடித்தல், கழிப்பறை பராமரிப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள பொதுப்பணித்துறை திட்டமிட்டது.
இதையும் படிங்க: நாமதான் ஆட்சி அமைப்போம்! உறுதியா இருங்க!! தவெக எம்.எல்.ஏ-க்களுக்கு தைரியம் சொன்ன மூத்த நிர்வாகிகள்!
இதற்காக பங்களாக்களை உடனடியாக காலி செய்யுமாறு செயற்பொறியாளர் ஜெயகர் மூலம் முன்னாள் அமைச்சர்களின் உதவியாளர்களுக்கு உத்தரவு அனுப்பப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழந்த எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பதவியை இழந்த உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரின் உதவியாளர்களுக்கும் இந்த உத்தரவு அனுப்பப்பட்டது.
ஆனால், எதிர்பார்த்ததற்கு மாறாக, ஐந்துக்கும் மேற்பட்ட முன்னாள் அமைச்சர்கள் பொதுப்பணித்துறை செயற்பொறியாளரை நேரடியாக அழைத்து பேசியுள்ளனர். “இரண்டு மாதத்திற்குப் பிறகே பங்களாக்களை காலி செய்ய முடியும்” என தடாலடியாக தெரிவித்துள்ளனர். விலை உயர்ந்த பொருட்கள் இருப்பதால் அவற்றை பாதுகாப்பாக எடுத்துச் செல்ல நேரம் தேவைப்படுவதாக அவர்கள் கூறினர்.
பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “பொதுவாக இரண்டு மாத அவகாசம் வழங்கப்படும். ஆனால் இம்முறை உடனடியாக காலி செய்யுமாறு கேட்டதால் முன்னாள் அமைச்சர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். பங்களா பக்கம் வர வேண்டாம் என எச்சரித்துள்ளனர்” என்றார்.
புதிய அரசு அமையும் வேளையில், அரசு சொத்துகளை ஒப்படைக்கும் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் அமைச்சர்களின் இந்த அணுகுமுறை அரசியல் வட்டாரத்தில் பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
இதையும் படிங்க: நாகரீக அரசியல் செய்யுறதா நினைச்சு நஷ்டப்படாதீங்க! திருமாவளவனுக்கு விசிக நிர்வாகிகள் அட்வைஸ்!