கூட்டணி மூலம் உள்ளாட்சி தேர்தலை சந்திக்கும் நிலை... கிருஷ்ணகிரியில் ஜி கே வாசன் பேட்டி..!!
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
இன்றைக்கு தமிழகத்தில் உள்ள அரசியல் சூழலில் பெரும்பாலான கட்சிகள் கூட்டணியின் வாயிலாகவே உள்ளாட்சி தேர்தலைச் சந்திக்கக்கூடிய நிலை இருக்கும் என்று தமாக தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மண்டல ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அக்கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய ஜி.கே.வாசன், உள்ளாட்சித் தேர்தல் பொதுவாகவே ஒன்று கட்சி அடிப்படையிலே, மற்றொன்று தனிப்பட்ட அடிப்படையிலே நடைபெறும். அதன் அடிப்படையில்தான் சின்னம் வழங்கப்படுகிறது. இருப்பினும் இன்றைக்கு தமிழகத்தில் உள்ள அரசியல் சூழலில் பெரும்பாலான கட்சிகள் கூட்டணியின் வாயிலாகவே தேர்தலைச் சந்திக்கக்கூடிய நிலை இருக்கும் என்று நான் நம்புகிறேன். இரண்டு திராவிடக் கட்சிகளும் மாறி மாறி ஆட்சி பீடத்திலே ஏறியதை மாற்றி, ஒரு புதிய கட்சிக்கே மக்கள் வாய்ப்புக் கொடுத்திருப்பதால் மக்களுடைய மனநிலை மாறியிருக்கிறது. அப்படி மாறும்போது கூட்டணிகளும் மாறத்தான் செய்கிறது, மாறித்தான் இருக்கிறது. எந்தெந்த கட்சி, எப்படி எப்படிக் கூட்டணிகள் அமையும் என்பது இடைத்தேர்தல் அல்லது உள்ளாட்சித் தேர்தல் நெருங்கும் போதுதான் உண்மை நிலை வெளிவரும் என்று தெரிவித்தார்.
அப்படி இருக்கும்போது வாக்குகளைப் பொறுத்தவரையிலே உறுதியாக ஒரே நிலையிலே இருக்கப் போவதில்லை என்று கூறினார். அரசினுடைய நல்ல திட்டங்களுக்கு வாக்கு உறுதியாக இருக்கும் என்பதிலும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஏனென்றால் சட்டமன்ற தேர்தல் முடிந்து மூன்று நான்கு மாதங்கள்தான் ஆகியிருக்கிறது. மக்கள் ஆட்சியாளர்கள் மீது முழு நம்பிக்கை கொடுத்திருக்கிறார்கள். அந்த நம்பிக்கையின் அடிப்படையிலே செயல்படக்கூடிய வாய்ப்பு நிறைய இருப்பதாகவே கருதுகிறேன் என்றார்.
இதையும் படிங்க: திமுகவின் EVM குற்றச்சாட்டு..! ஆதாரம் இல்லை... தேர்தல் அதிகாரி விளக்கம்..!!
கூட்டணி குறித்து நான் ஏற்கனவே சொன்னது போல, தற்போது தனித்தன்மையோடு செயல்பட்டால்தான் அனைத்துத் தரப்பு மக்களுடைய எண்ணங்களையும் பிரதிபலிக்க முடியும். தேர்தல் நெருங்கும் போது அதிகாரப்பூர்வமாக கட்சியிலே கலந்து ஆலோசித்து அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார். மதுக்கடைகளைப் படிப்படியாக மூட வேண்டும் என்று நினைக்கிறோம். மதுவில்லா தமிழகம்தான் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினுடைய எண்ணமாக இருக்கிறது. விவசாயக் கடன் ரத்து படிப்படியாகச் செய்வது வரவேற்கத்தக்கது. அதேசமயம் முழுமையாகச் செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகளிடம் இருப்பதையும் தெரிவிப்பது எங்களுடைய கடமை என்று கூறினார்.
தொகுதி மறுவரையறையைப் பொறுத்தவரையிலே, சட்டமன்றத்திலே ஆட்சியாளர்கள் கொண்டுவந்துள்ள தீர்மானத்தை தமாகா முழுமையாக ஏற்றுக்கொள்கிறது என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் கட்சி அலுவலகத்தில் சடலமாக மீட்பு! தற்கொலையா? கொலையா? போலீஸ் விசாரணை!