×
 

கடைக்காரராக சித்தரிக்கப்பட்ட பிரதமர் மோடி.. தேஜஸ்வி மீது பாய்ந்த FIR..!!

பிரதமர் மோடியை கேலி செய்ததாக தேஜஸ்வி யாதவ் மீது மகாராஷ்டிராவில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யயப்பட்டுள்ளது.

பீகார் மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதா தள (RJD) கட்சியின் மூத்த தலைவருமான தேஜஸ்வி யாதவ் மீது மகாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியை கேலி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து, அவர் மீது எஃப்.ஐ.ஆர் (முதல் தகவல் அறிக்கை) பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை, பாஜகவைச் சேர்ந்த கட்சிரோலி எம்எல்ஏ மிலிந்த் ராம்ஜி நரோட் தாக்கல் செய்த புகாரின் அடிப்படையில் எடுக்கப்பட்டது.

நேற்று பிரதமர் மோடி பீகாரின் கயா மாவட்டத்தில் 13,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்தார். இதற்கு முன்னதாக, தேஜஸ்வி யாதவ் தனது எக்ஸ் தளத்தில் பிரதமரை விமர்சித்து ஒரு கேலிச்சித்திரத்தைப் பகிர்ந்தார். இதில், மோடியை ஒரு கடைக்காரராக சித்தரித்து, “பிரசித்தி பெற்ற ஜூம்லாக்களின் கடை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், “இன்று கயாவில் பொய்கள் மற்றும் ஜூம்லாக்களின் கடை திறக்கப்படும்! பிரதமர் ஜி, பீகாரின் நீதி விரும்பும் மக்கள் உங்கள் பொய்களையும் ஜூம்லாக்களையும் உடைப்பார்கள்” என்று பதிவிட்டார். 

இதையும் படிங்க: மோடியோட ஸ்கெட்ச், அமித் ஷாவின் செக்!! ஆட்டம் காணும் ஸ்டாலினின் முதலமைச்சர் பதவி!!

அதுமட்டுமின்றி அவரது ஆட்சியின் 11 ஆண்டுகளையும், பீகாரில் என்டிஏ ஆட்சியின் 20 ஆண்டுகளையும் கேள்வி எழுப்பினார். இந்தப் பதிவு, பொது மக்களிடையே புண்படுத்தும் வகையிலும், சமூக பதற்றத்தை ஏற்படுத்தும் வகையிலும் இருப்பதாக மிலிந்த் நரோட் தனது புகாரில் குறிப்பிட்டார். 

இதனைத் தொடர்ந்து, கட்சிரோலி காவல் நிலையத்தில் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) பிரிவுகள் 196 (வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை தூண்டுதல்), 356 (அவதூறு), 352 (அமைதியை குலைக்கும் நோக்கத்துடன் திட்டமிட்ட அவமதிப்பு) மற்றும் 353 (பொது குறும்பு ஏற்படுத்தும் அறிக்கைகள்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்தது.

இதற்கு பதிலளித்த தேஜஸ்வி, “எஃப்.ஐ.ஆருக்கு யார் பயப்படுகிறார்கள்? ‘ஜும்லா’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது கூட குற்றமாகிவிட்டதா? நாங்கள் உண்மையைப் பேசுகிறோம், எந்த எஃப்.ஐ.ஆருக்கும் அஞ்ச மாட்டோம்,” என்று கூறினார். மேலும், ஆர்ஜேடி கட்சியின் செய்தித் தொடர்பாளர் சக்தி சிங் யாதவ், பிரதமரின் வாக்குறுதிகளை நினைவூட்டுவது குற்றமாகக் கருதப்படுவதாக விமர்சித்தார். 

இதேபோல், உத்தரபிரதேசத்தின் ஷாஜஹான்பூரிலும் தேஜஸ்வி மீது மற்றொரு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது, பாஜகவின் மோடியை “வாக்கு திருடன்” என்று குறிப்பிட்டதாக கூறப்படும் பதிவு தொடர்பானது. இந்த விவகாரம் பீகார் மற்றும் மகாராஷ்டிராவில் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பிரதமர் மோடி ஜப்பான், சீனா பயணம்!! 7 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் சம்பவம்!! அமெரிக்காவுக்கு ஆப்பு?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share