பாஜக உத்திக்கு இண்டியா கூட்டணியால் ஈடு கொடுக்க முடியல.. அப்பா ப.சிதம்பரம் வழியில் மகன் கார்த்தி சிதம்பரம்!
பாஜக கையாளும் உத்திகளுக்கு ஈடாக 'இண்டியா' கூட்டணியால் செயல்பட முடியவில்லை என்று சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.
பாஜக கையாளும் உத்திகளுக்கு ஈடாக 'இண்டியா' கூட்டணியால் செயல்பட முடியவில்லை என்று சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்தார். “மகளிர் உரிமைத் தொகையைத் தமிழக அரசு பாகுபாடின்றி எல்லோருக்கும் வழங்க வேண்டும். மற்ற திட்டங்களைவிட நேரடியாக மக்களிடம் பணம் கொடுப்பது மிகச் சிறந்தது. இதன்மூலம் உள்ளூர் பொருளாதாரம் நன்றாக வளரும். தமிழகத்தைப் பொறுத்தவரை 'இண்டியா' கூட்டணி வலுவாக உள்ளது. ஆனால், இந்தியா அளவில் 'இண்டியா' கூட்டணி எந்த அளவில் இருக்கிறது என்பதைதான் ப. சிதம்பரம் கூறியுள்ளார்.
நாட்டில் கடந்த 3 தேர்தல்களில் எங்கள் (காங்கிரஸ்) கட்சி வெற்றி பெற முடியவில்லை. மக்களவைத் தேர்தலிலும் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. பாஜக கையாளும் உத்திகளுக்கு ஈடாக 'இண்டியா' கூட்டணியால் செயல்பட முடியவில்லை. தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்களில் 'இண்டியா' கூட்டணியில் உள்ள கட்சிகளிடம் ஒருமித்த கருத்து வரவில்லை. இதையெல்லாம் மையப்படுத்திதான் ப. சிதம்பரம் பேசியுள்ளார்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு என்பது நீதிமன்ற தீர்ப்புதான். அதனை வேறு யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. அதே நேரத்தில் பாதிக்கப்பட்டோருக்கு கூடுதலாக நிதி கொடுப்பதை குறை சொல்ல முடியாது. பொள்ளாச்சி பாலியல் வழக்கு, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கு ஆகிய இரண்டிலும் மிரட்டியே பலாத்காரம் நடைபெற்றுள்ளது. என்றாலும், இரண்டுக்கும் வெவ்வேறு அளவுகோல் உள்ளன. அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கிலும் நியாயமான முறையில் தீர்ப்பு வழங்க வேண்டும் என்பதே எல்லோருடைய எதிர்பார்ப்பு ஆகும்.
இதையும் படிங்க: பாஜக ஸ்ட்ராங்கா இருக்கு; INDIA கூட்டணி பலவீனமா இருக்கு.. ப.சிதம்பரம் பகீர் கருத்து!!
தமிழகப் பொருளாதாரத்தைச் சீர்ப்படுத்த வேண்டுமென்றால், முதலில் மின் வாரியத்துக்கு இருக்கும் ரூ.1 லட்சம் கோடி கடனை குறைக்க வேண்டும். கல்விக் கடன் தள்ளுபடி என்று மாநில அரசு வாக்குறுதி கொடுத்தாலும், மத்திய அரசே தள்ளுபடி செய்ய அதிகாரம் உள்ளது. ஆனால், அதற்கு அவர்களுக்கு மனமில்லை. ஒவ்வொருவருடைய கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்துவது என்கிற அறிவிப்பு எந்த அளவுக்கு உண்மையோ, அதுபோன்றதுதான் மாநில அரசின் கல்விக் கடன் ரத்து, மாதந்தோறும் மின்சார கட்டணம் கணக்கீடு என்பது போன்ற வாக்குறுதிகள்" என்று கார்த்தி சிதம்பரம் கூறினார்.
முன்னதாக இண்டியா கூட்டணியின் எதிர்காலம் குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ஒற்றுமை அப்படியே இருக்கிறதா என்பது குறித்து எனக்கு நிச்சயமாக தெரியவில்லை. ஆனால், அதன் எதிர்காலம் பிரகாசமாக இல்லை" என்று ப.சிதம்பரம் கூறியிருந்தார்.
இதையும் படிங்க: பீஹாரில் ராகுல் காந்தி தடுத்து நிறுத்தம்..! நிதீஷ் குமாருக்கு அவ்வளவு பயமா? உசுப்பேற்றிய ராகுல்..!