RSS பாதையில் மத்திய அரசு…மாநில உரிமைகள் பறிப்பு… வீரமணி கடும் விமர்சனம்
மாநில அரசுகளே இல்லாமல் RSS கொள்கையுடன் மத்திய அரசு செயல்படுகிறது என்று திராவிட கழக தலைவர் கி.வீரமணி விமர்சித்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஆத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்த திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, ஒன்றிய அரசின் அண்மைக்கால நடவடிக்கைகள் மற்றும் மகாத்மா காந்தி பெயரிலான திட்ட மாற்றங்கள் குறித்துத் தனது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் காந்தியின் பெயர் நீக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டிய அவர், இது திட்டமிடப்பட்ட ஒரு உள்நோக்கம் கொண்ட செயல் என்று குறிப்பிட்டார். ஏழை மக்கள் 100 முதல் 125 நாட்கள் வரை வேலைக்காகக் காத்திருக்கும் சூழலில், முறையான பொறுப்புணர்வும் உத்தரவாதமும் இல்லாத நிலையை அரசு உருவாக்கியுள்ளது. இன்று திட்டத்தில் இருந்து பெயரை நீக்கிவிட்டனர். ரூபாய் நோட்டுகளில் உள்ள காந்தி படத்தை எப்போது தூக்குவார்கள் என்று தெரியவில்லை. காந்தியைக் கொன்ற சித்தாந்தம் கொண்டவர்களே இன்று ஆளுங்கட்சியாக இருக்கிறார்கள்," என்று அவர் தெரிவித்தார்.
மாநில அரசுகளின் அதிகாரங்கள் திட்டமிட்டுப் பறிக்கப்படுவதாகக் குற்றம் சாட்டிய அவர், அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பு சிதைக்கப்படுவதாகக் கூறினார். கல்வி உதவித்தொகை அல்லது நிதி வேண்டுமானால் குறிப்பிட்ட மொழித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என நிபந்தனை விதிக்கிறார்கள். இது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. கல்வி நிறுவனங்களின் சுதந்திரத்தைப் பறித்து, ஒட்டுமொத்தக் கல்வியையும் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப் பார்க்கிறார்கள்.
இதையும் படிங்க: 100 நாள் வேலைத் திட்டம் ரத்து: "இனி 60 நாட்கள் கூட வேலை கிடைக்காது!" - துரை வைகோ
ஒன்றிய அரசு ஒரு 'ஃபாசிசக் கூட்டணி' போலச் செயல்பட்டு, மாநில அரசியலே இருக்கக் கூடாது என நினைக்கிறது. "ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மதம், ஒரே கலாச்சாரம்" என்பதே அவர்களின் ஒற்றை இலக்கு. தொகுதி மறுவரையறை (SIR) மற்றும் தேர்தல் தொடர்பான பணிகளில் ஒன்றிய அரசு காட்டும் அவசரம் குறித்து அவர் பேசுகையில், "தேர்தல் ஆணையத்தைத் தங்கள் விருப்பப்படி இயக்கி வருகிறார்கள். நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போதே, தேர்தல் ஆணையம் மூலம் பணிகளை மிக வேகமாக மேற்கொள்கின்றனர். இது சட்டச் சிக்கல்களைப் பற்றிய கவலையற்ற ஒரு சர்வாதிகாரப் போக்கு நிலவுவதாகக் கூறினார்.
தற்போது பாஜக அரசு கூட்டணிக் கட்சிகளைச் சார்ந்து இருந்தாலும், அவர்களின் செயல்பாடுகள் அனைத்தும் மாநில அரசுகளைக் கலைத்துவிட்டு ஒற்றை ஆட்சியை நிலைநிறுத்துவதையே நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும், இதனை மக்கள் புரிந்துகொள்ளத் தொடங்கிவிட்டனர் என்றும் கி.வீரமணி தனது பேட்டியில் நிறைவு செய்தார்.
இதையும் படிங்க: 100 நாள் வேலை பெயர் மாற்றத்துக்கு மோடியின் வெறுப்பே காரணம் - ராகுல்காந்தி குற்றச்சாட்டு