எண்ணிக்கை 7 ஆக உயர்வு... விடிந்ததுமே வெளியானது பரபர அறிவிப்பு... அதிமுகவுக்கு தவெக வைத்த அதிரடி செக்...!
கரூர் தொகுதி காலியானதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு – இடைத்தேர்தலுக்கான நடவடிக்கை விரைவில் தொடக்கம்
முன்னாள் அமைச்சர் மற்றும் கரூர் தொகுதியின் அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்த எம்.ஆர். விஜயபாஸ்கர், தனது எம்எல்ஏ பதவியை நேற்று ராஜினாமா செய்தார். அவர் அளித்த ராஜினாமா கடிதத்தை சட்டப்பேரவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, கரூர் சட்டமன்றத் தொகுதி காலியாகியுள்ளதாக சட்டப்பேரவைச் செயலகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
விதிகளின்படி, ஒரு சட்டமன்றத் தொகுதி காலியானால், ஆறு மாதங்களுக்குள் அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதற்கு முன்பு தமிழ்நாட்டில் ஆறு சட்டமன்றத் தொகுதிகள் காலியாக இருந்த நிலையில், எம்.ஆர். விஜயபாஸ்கரின் ராஜினாமாவைத் தொடர்ந்து காலியாக உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க: கரூர் சம்பவத்தில் அடுத்த பாய்ச்சல்... சிபிஐ முன் ஆஜரான 5 முக்கிய போலீஸ்... தவெக நிர்வாகிகளை என்ன செஞ்சாங்க தெரியுமா?
சட்டப்பேரவைச் செயலகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தேர்தல் ஆணையத்திற்கும் அனுப்பி வைக்கப்படும். இதையடுத்து, காலியாக உள்ள ஏழு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை அறிவிக்கும் நடவடிக்கையை தேர்தல் ஆணையம் விரைவில் தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
எம்.ஆர்.விஜயபாஸ்கர் ராஜினாமா பின்னணி:
முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் கரூர் எம்.ஆர். விஜயபாஸ்கர், அதிமுகவில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகி வந்தன. அதுமட்டுமல்லாமல், தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்ய உள்ளதாக கூறப்பட்டது. ஏற்கனவே அதிமுகவில் சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி, சி. விஜயபாஸ்கர் உள்ளிட்டோருடன் சேர்ந்து 24 சட்டமன்ற உறுப்பினர்கள் அதிருப்தி அணியாக செயல்பட்டு வந்தனர். எடப்பாடி கே. பழனிசாமியின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்றும், தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்றும், தேர்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்து பொதுக்குழுவை கூட்டி விவாதிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வந்தனர்.
இதையும் படிங்க: இன்று முதல் 2 நாட்களுக்கு அதிரடி... களத்தில் இறங்கிய சி.எம்.விஜய்... தலைமைச் செயலகத்தில் குவியும் முக்கிய அதிகாரிகள்...!
இந்த அணியில் முக்கிய உறுப்பினராக எம்.ஆர். விஜயபாஸ்கரும் இருந்தார். எடப்பாடி கே. பழனிசாமிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருந்ததால், அவரிடம் இருந்த கட்சிப் பொறுப்புகள் பறிக்கப்பட்டன. கரூர் மாவட்டச் செயலாளராக இருந்த அவரிடம் இருந்து அந்தப் பொறுப்பு நீக்கப்பட்டது.
இதனால் அவர் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர், சில நாட்களுக்கு முன்பு அதிருப்தி அணியினருக்கு மீண்டும் கட்சிப் பொறுப்புகள் வழங்கப்பட்டன. ஆனால், முன்பு வகித்த மாவட்டச் செயலாளர் பதவி மீண்டும் வழங்கப்படவில்லை.
எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு கரூர் மாவட்டச் செயலாளர் பொறுப்புக்கு பதிலாக, அதிமுகவின் கொள்கைப் பரப்புச் இணைச் செயலாளர் என்ற பதவி வழங்கப்பட்டது. இந்தப் பதவிக்கு மாவட்ட நிர்வாக அதிகாரங்கள் எதுவும் இல்லை. கட்சி நிர்வாகிகளை நியமித்தல், கூட்டங்களை நடத்துதல், ஆர்ப்பாட்டங்களை ஒருங்கிணைத்தல், பகுதி மற்றும் கிளைச் செயலாளர்களை நியமித்தல் அல்லது நீக்குதல் போன்ற அதிகாரங்கள் மாவட்டச் செயலாளருக்கே உரியவை.
இதுபோன்ற டம்மி பதவியை வழங்கியதால் எம்.ஆர்.விஜயபாஸ்கர், புதிய பொறுப்புகள் வழங்கப்பட்ட பின்னரும், எடப்பாடி கே. பழனிசாமியை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்காததும் அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்திருந்தது. இந்தச் சூழ்நிலையில், கரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், இன்று ராஜினாமா செய்திருக்கிறார்.
நேற்று காலை தலைமைச் செயலகத்திற்குச் சென்ற எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது ராஜினாமா கடிதத்தினை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரிடம் வழங்கினார். அதனை ஏற்றுக்கொண்டதாக சபாநாயகரும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதுகுறித்து வெளியாகியுள்ள செய்திக்குறிப்பில், சட்டமன்ற பேரவை விதி 21-இன் படி கரூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மாண்புமிகு திரு.எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது பதவி விலகல் கடிதத்தை தம் கைப்பட எழுதி என்னிடம் அளித்துள்ளார். அவர் அளித்த பதவி விலகல் கடிதம் சட்டமன்ற பேரவை விதி 22-இன் படி முறையாக உள்ளதால் அதனை நான் ஏற்றுக்கொள்கிறேன் எனக்குறிப்பிட்டுள்ளார்.
எம்.ஆர். விஜயபாஸ்கரின் அடுத்த அரசியல் நகர்வு குறித்து அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இதையும் படிங்க: "கரூர் பெருந்துயரம்"..! மீண்டும் விசாரணையை முடுக்கிய சிபிஐ..! களமிறங்கிய அதிகாரிகள்..!!