"ஒரிஜினல் எப்போதும் ஒரிஜினல்தான்" BRS-க்கு போட்டியா TRS? சந்திர சேகர் ராவ் மகளுக்கு பதிலடி!
சந்திர சேகர் ராவின் மகள் கவிதா, தெலங்கானா ராஷ்டிரிய சேனா என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ள நிலையில், ஒரிஜினல் எப்போதும் ஒரிஜினல்தான் என குறிப்பிட்டு மீம்ஸ் ஒன்றை வெளியிட்டுள்ள BRS கட்சி.
தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா, தந்தையின் BRS கட்சியிலிருந்து விலகி புதிய அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளார். இன்று முனிராபாத்தில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் அவர் தனது புதிய கட்சியின் பெயரை அறிவித்தார்.
கவிதா தனது புதிய கட்சிக்கு தெலுங்கானா ராஷ்டிரிய சேனா (TRS) என்று பெயர் சூட்டியுள்ளார். இந்த அறிவிப்பு தெலங்கானா அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிகழ்ச்சியில் பேசிய கவிதா, “கடின உழைப்பின் மூலம் தெலுங்கானாவில் ஒரு புதிய அரசியல் சக்தி உருவெடுத்துள்ளது. இது என் வாழ்வில் மறக்க முடியாத நாள். மாநிலத்தின் எதிர்காலத்துக்காக அனைவரும் ஒன்றிணைந்து பங்கேற்க வேண்டும்” என்று உணர்ச்சிபூர்வமாகத் தெரிவித்தார். பல இன்னல்களைச் சந்தித்த பிறகும் தெலுங்கானாவுக்காக தொடர்ந்து போராடி வருவதாகவும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: வெளியே தலைகாட்டி 2 வருசமாச்சு!! தெலுங்கானா மாஜி முதல்வர் சந்திரசேகர ராவுக்கு என்னாச்சு?
கவிதா முன்பு BRS கட்சியில் எம்.எல்.சியாக இருந்தார். டெல்லி மதுபான ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலையானார். கடந்த ஆண்டு உள்கட்சி பூசல் காரணமாக BRS-லிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதன் பிறகு அவர் தனியாக ஒரு அமைப்பை நடத்தி வந்த நிலையில், இப்போது முழு அரசியல் கட்சியாக உருவெடுத்துள்ளார்.
இந்த நிலையில், BRS கட்சி கவிதாவின் புதிய கட்சிப் பெயருக்கு கடும் எதிர்வினையாற்றியுள்ளது. BRS-ன் முன்னாள் பெயரான தெலங்கானா ராஷ்டிரிய சமிதி (TRS) என்பதன் சாயலில் கவிதா தன் கட்சிக்கு TRS என்று பெயர் வைத்திருப்பதை சுட்டிக்காட்டி, “ஒரிஜினல் எப்போதும் ஒரிஜினல்தான்” என்ற வாசகத்துடன் ஒரு மீம் வெளியிட்டுள்ளது. இந்த மீம் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
குடும்ப அரசியலில் ஏற்பட்டுள்ள பிளவு இப்போது பொதுவெளியில் தெளிவாகத் தெரியத் தொடங்கியுள்ளது. தெலங்கானா அரசியலில் புதிய அத்தியாயம் தொடங்கியிருப்பதாக அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.
இதையும் படிங்க: கியாஸ் தட்டுப்பாடு..! தி.நகரில் 2 கி.மீ.க்கு அணிவகுத்து நிற்கும் ஆட்டோக்கள்..!