“திமாகி நக்சல்கள்” யார்? நாடே பரபரப்பான மோடியின் அந்த ஒரு வார்த்தை! கிரண் ரிஜிஜூ அதிரடி விளக்கம்!
பிரதமர் மோடியின் சுதந்திர தின உரையை, எதிர்க்கட்சிகள் தவறாக சித்தரிப்பதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் சுதந்திர தின உரையில் இடம்பெற்ற “மனதளவிலான நக்சல்கள்” என்ற கருத்து தொடர்பாக அரசியல் விவாதம் தீவிரமடைந்துள்ளது. பிரதமர் எதிர்க்கட்சிகளை குறிவைத்தே இந்த வார்த்தையை பயன்படுத்தியதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
நாட்டின் 80-வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, ஆயுதம் ஏந்திய நக்சலைட் இயக்கத்தை ஒழிப்பதுடன், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு மனதளவில் நக்சல் சிந்தனையை ஆதரிப்பவர்களையும் அடையாளம் கண்டு தனிமைப்படுத்த வேண்டும் என்ற கருத்தை அவர் முன்வைத்தார்.
இந்த கருத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. குறிப்பாக, பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளை “மனதளவிலான நக்சல்கள்” என மறைமுகமாக குறிப்பிடுவதாக காங்கிரஸ் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதனால் “மனதளவிலான நக்சல்கள்” என்ற வார்த்தை தற்போது அரசியல் விவாதத்தின் மையமாகியுள்ளது.
இதையும் படிங்க: “திமாகி நக்சல்கள்” என்றால் என்ன? பிரதமர் மோடி பேச்சால் சூடுபிடித்த விவாதம்! இணையத்தில் பரபரப்பு!
இதற்கு பதிலளிக்கும் வகையில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ சமூக வலைதளமான எக்ஸில் விளக்கம் அளித்துள்ளார்.
அவரது பதிவின்படி, இந்திய அரசியலமைப்பை நிராகரித்து மாவோயிஸ்ட் இயக்கங்களை ஆதரிப்பவர்கள், பிரிவினைவாதிகளுடன் இணைந்து ஜம்மு-காஷ்மீர் தொடர்பான 370-வது சட்டப்பிரிவை ஆதரிப்பவர்கள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களை இந்தியாவிலிருந்து பிரிக்கும் நோக்கில் “சிக்கன் நெக்” என்று அழைக்கப்படும் சிலிகுரி வழித்தடத்தை துண்டிக்க முயற்சிப்பவர்கள் போன்றவர்களைத்தான் பிரதமர் மனதளவில் நக்சல்களைப் போன்றவர்கள் என குறிப்பிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதாவது, அனைத்து எதிர்க்கட்சியினரையும் பிரதமர் குறிவைக்கவில்லை என்றும், குறிப்பிட்ட சித்தாந்தங்கள் மற்றும் செயல்பாடுகளை மட்டுமே பிரதமர் தனது உரையில் சுட்டிக்காட்டியதாகவும் ரிஜிஜூ விளக்கம் அளித்துள்ளார்.
மறுபுறம், பிரதமரின் பேச்சு அரசியல் எதிரிகளை குறிவைக்கும் வகையில் இருப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. இதனால் சுதந்திர தின உரையில் பிரதமர் பயன்படுத்திய “மனதளவிலான நக்சல்கள்” என்ற சொற்றொடர், ஆட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையிலான புதிய அரசியல் மோதலுக்கு காரணமாகியுள்ளது.
மோடியின் உரை மற்றும் அதற்கான ரிஜிஜூவின் விளக்கம் தொடர்பாக சமூக வலைதளங்களிலும் தீவிர விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. “மனதளவிலான நக்சல்கள்” என்ற சொல்லாடலால் பிரதமர் உண்மையில் யாரை குறிப்பிடுகிறார் என்பது குறித்த அரசியல் விளக்கங்களும் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.
இதையும் படிங்க: செங்கோட்டைக்கு கிளம்பிய மோடி... வழிமறித்த “நண்பர்கள்”! மாடுகள், மயில்களுடன் பிரதமர் பகிர்ந்த வீடியோ!