×
 

தொகுதி மறுவரையறை விவகாரம்!! வதந்திங்களை பரப்பாதீங்க! எதிர்க்கட்சிகளுக்கு கிரண் ரிஜிஜு கண்டிப்பு!

தொகுதி மறுவரையறை குறித்து எதிர்க்கட்சிகள் வதந்திகளைப் பரப்பக் கூடாது என பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்தார்.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், டெல்லியில் நடைபெற்ற பாராளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் தொடர்பாக பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ எதிர்க்கட்சிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இன்று (ஏப்ரல் 16) காலை 11 மணிக்கு தொடங்கிய சிறப்புக் கூட்டத்தொடரில் லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார். சபாநாயகர் ஓம் பிர்லா, 12 மணி நேரம் விவாதம் நடைபெறும் என்றும், நாளை மாலை 4 மணிக்கு ஓட்டெடுப்பு நடைபெறும் என்றும் அறிவித்தார்.

நிருபர்களிடம் பேசிய அமைச்சர் கிரண் ரிஜிஜூ, “எதிர்க்கட்சிகளுக்கு நான் ஒரு வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன். தயவுசெய்து தொகுதி மறுவரையறை குறித்து வதந்திகளைப் பரப்பாதீர்கள். தொகுதி மறுவரையறை என்ற சாக்கில் மகளிர் இட ஒதுக்கீட்டை எதிர்க்காதீர்கள். தென் மக்களைத் தவறாக வழிநடத்தாதீர்கள். வேறு சில பிரச்சினைகளை எழுப்பி, இந்த நல்ல நோக்கத்தை திரித்துக்கூற வேண்டாம். மகளிர் இட ஒதுக்கீட்டை தோற்கடிப்பதற்கு எந்த காரணத்தையும் கூறாதீர்கள்” என்று வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: டெல்லியை சூடாக்கிய மகளிர் இட ஒதுக்கீடு மசோதா!! பார்லி.,யில் நாளை மாலை 4 மணிக்கு ஓட்டெடுப்பு!

மேலும், “இன்று ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள். லோக்சபாவிலும், மாநில சட்டசபைகளிலும் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா நிறைவேற்றப்படும். இது என்றென்றும் நினைவுகூரப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டமாக அமையும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள இந்த மசோதா தோற்கடிக்கப்படாமல் இருக்க அனைத்து கட்சிகளும் ஆதரவு அளிக்கும் என்று நம்புகிறேன்” என்று கிரண் ரிஜிஜூ தெரிவித்தார்.

தொகுதி மறுவரையறை (டெலிமிடேஷன்) மசோதா காரணமாக தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும் என்று எதிர்க்கட்சிகள், குறிப்பாக திமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அமைச்சர் ரிஜிஜூவின் இந்த வேண்டுகோள் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டால், பெண்களின் அரசியல் பங்கேற்பு கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: டெல்லியை சூடாக்கிய மகளிர் இட ஒதுக்கீடு மசோதா!! பார்லி.,யில் நாளை மாலை 4 மணிக்கு ஓட்டெடுப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share