×
 
☰

முதல்வர் விஜய் மதுரை வருகையை முன்னிட்டு நாளை டிரோன்களுக்கு தடை! பாதுகாப்பு பணி தீவிரம்!

முதல்வரின் பயணப் பாதைகளில் பொதுமக்கள் கூடும் வாய்ப்பு உள்ளதால் கூட்டக் கட்டுப்பாடு மற்றும் போக்குவரத்து தொடர்பான பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முதல்வர் விஜய் நாளை மதுரைக்கு வருகை தர உள்ள நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக நகரின் முக்கிய பகுதிகளில் டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு நாளை முழுவதும் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்ட கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முதல்வர் விஜய் விமானம் மூலம் மதுரை வந்து அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சிகளை முடித்த பிறகு அவர் மீண்டும் சென்னைக்கு புறப்பட உள்ளார்.

முதல்வரின் வருகையை முன்னிட்டு மதுரை விமான நிலையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதேபோல், முதல்வர் பயணம் மேற்கொள்ளும் சாலைகள், அவர் தங்கும் இடம், செல்லும் பகுதிகள் மற்றும் அரசு நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களிலும் பாதுகாப்பு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கிறிஸ்தவர் விஜய் மீனாட்சி கோயிலில் நுழைய நிபந்தனை? இந்து மத நம்பிக்கை குறித்து கையெழுத்து பெற திட்டம்?

இந்த நிலையில், மேற்கண்ட பகுதிகளில் டிரோன்கள், ஆளில்லா விமானங்கள் உள்ளிட்ட எந்தவிதமான ஆளில்லா வான்வழி சாதனங்களையும் பறக்க விடக்கூடாது என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படாமல் இருப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் விஜயின் மதுரை பயணத்தை முன்னிட்டு அரசு ராஜாஜி மருத்துவமனை உள்ளிட்ட நிகழ்ச்சி நடைபெறும் இடங்களிலும் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. செப்டம்பர் 28-ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை முதல்வர் தொடங்கி வைக்க உள்ளதாகவும், தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதனிடையே, முதல்வரின் பயணப் பாதைகளில் பொதுமக்கள் கூடும் வாய்ப்பு உள்ளதால் கூட்டக் கட்டுப்பாடு மற்றும் போக்குவரத்து தொடர்பான பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

டிரோன் தடையை மீறி ஆளில்லா வான்வழி வாகனங்களை இயக்கும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, நாளை மதுரையில் டிரோன் இயக்கத் திட்டமிடுபவர்கள் இந்தத் தடையை கவனத்தில் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 

இதையும் படிங்க: மீனாட்சி அம்மன் கோவிலுக்கு முதல்வர் விஜய் விசிட்? பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share