மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தலில் பாஜ கூட்டணிக்கு வெற்றி! காங்கிரஸ் கூட்டணிக்கு அடிமேல் அடி! மாபெறும் சறுக்கல்!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 246 நகராட்சிகள் மற்றும் 42 பஞ்சாயத்துகளில் கடந்த 2 மற்றும் 20ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடந்தது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் 246 நகராட்சிகள் மற்றும் 42 நகர பஞ்சாயத்துகளில் கடந்த 2 மற்றும் 20-ஆம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் ஆளும் பாஜக - சிவசேனா (ஷிண்டே) - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் - உத்தவ் சிவசேனா - சரத் பவார் என்சிபி கூட்டணி பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளது.
246 நகராட்சிகளில் பாஜக 100 இடங்களிலும், சிவசேனா (ஷிண்டே) 45 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 33 இடங்களிலும் வெற்றி பெற்றன. இதன்மூலம் ஆளும் கூட்டணி மொத்தம் 178 நகராட்சிகளைக் கைப்பற்றி சாதனை படைத்தது. எதிர்க்கட்சி கூட்டணியில் காங்கிரஸ் 26, உத்தவ் சிவசேனா 7, சரத் பவார் என்சிபி 8 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றன. மீதமுள்ள 27 நகராட்சிகளில் சுயேட்சைகளும் பிற கட்சிகளும் வென்றன.
42 நகர பஞ்சாயத்துகளில் ஆளும் கூட்டணி 34 இடங்களையும், எதிர்க்கட்சி கூட்டணி 7 இடங்களையும் கைப்பற்றின. ஒரு இடம் மற்றவருக்கு சென்றது.
இதையும் படிங்க: பஞ்சாப்பில் 3 இடங்களுக்கு புனித நகர அந்தஸ்து!! மது, இறைச்சி விற்பனைக்கு தடை! அரசு கறார்!
கடந்த ஆண்டு சட்டசபைத் தேர்தலில் படுதோல்வி அடைந்த எதிர்க்கட்சி கூட்டணி, உள்ளூர் பிரச்னைகளை முன்வைத்து இம்முறை வெற்றி பெற முயன்றது. ஆனால் ஆளும் கூட்டணி முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸ் ஆட்சியின் ஒரு ஆண்டு சாதனைகளை முன்னிறுத்தி ஓட்டுக் கேட்டது. கூட்டணியில் ஃபட்னவிஸ் - ஏக்நாத் ஷிண்டே இடையே மனக்கசப்பு உள்ளதாக எதிர்க்கட்சிகள் கூறிவந்த நிலையில், இந்த வெற்றி அந்தக் குற்றச்சாட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
எதிர்க்கட்சி கூட்டணியில் உத்தவ் தாக்கரே பிரசாரத்துக்கு வரவில்லை. சரத் பவார் கட்சியினர் தங்கள் வேட்பாளர்கள் போட்டியிட்ட இடங்களில் மட்டுமே பிரசாரம் செய்தனர். இதனால் கூட்டணியில் ஒருங்கிணைப்பு இல்லாதது தோல்விக்கு காரணமாகப் பார்க்கப்படுகிறது.
வரும் ஜனவரியில் மும்பை உள்ளிட்ட 29 மாநகராட்சிகளில் தேர்தல் நடக்க உள்ளது. நகராட்சி, பஞ்சாயத்தில் தோல்வி அடைந்ததால், மாநகராட்சித் தேர்தலில் கவனம் செலுத்த வேண்டும் என்று காங்கிரஸ் மேலிடம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து மாநகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் என்று மாநிலப் பொறுப்பாளர் ரமேஷ் சென்னிதலா அறிவித்துள்ளார். இது எதிர்க்கட்சி கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ச்சியாக பல தேர்தல்களில் தோல்வி அடைந்து வரும் காங்கிரஸ், இந்த உள்ளாட்சித் தோல்வியால் மேலிடத்தில் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது.
இதையும் படிங்க: தவெக கிறிஸ்துமஸ் விழா கோலாகல தொடக்கம்... முக்கியஸ்தர்களுக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்ற விஜய்...!