சட்டசபை கூட்டம்! இடைக்கால பட்ஜெட் பதிலுரை! அதிமுக, பாஜக, அன்புமணி தரப்பு எம்.எல்.ஏ-க்கள் புறக்கணிப்பு!
சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட் மீதான பதிலுரை இன்று நடைபெறும் நிலையில், அவைக்கு வராமல் அதிமுக எம்எல்ஏக்கள் புறக்கணித்துள்ளனர். பாஜக மற்றும் அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் சட்டப்பேரவைக்கு வரவில்லை.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் இடைக்கால நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று (பிப்ரவரி 20, 2026) பெரும் அரசியல் பரபரப்பு எழுந்துள்ளது. எதிர்க்கட்சியான அதிமுக எம்எல்ஏக்கள் முழுமையாக சட்டப்பேரவைக்கு வராமல் இடைக்கால பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான பதிலுரையை புறக்கணித்துள்ளனர்.
அதேபோல, பாஜக மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆதரவு எம்எல்ஏக்களும் கூட்டத்திற்கு வரவில்லை. இது தேர்தல் முன் அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பேரவைத் தலைவர் மு.அப்பாவு தலைமையில் காலை தொடங்கிய கூட்டத்தில், 2026-27 நிதியாண்டுக்கான செலவின முன்பண மானிய கோரிக்கைகளை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு முன்வைக்க உள்ளார்.
இதையும் படிங்க: ரூ.5,396 கோடிக்கு இடைக்கால பட்ஜெட்! முதல்வர் ரங்கசாமி தாக்கல்!! ரூ.537 கோடியே 38 லட்சத்துக்கு கூடுதல் செலவினங்கள்!
அதைத் தொடர்ந்து, 2025-26 நிதியாண்டுக்கான கூடுதல் செலவின மானிய கோரிக்கைகள் அளிக்கப்படும். பின்னர், இடைக்கால பொது நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான பதிலுரையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆற்ற உள்ளனர்.
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இல்லாத நிலையில், பொதுவிவாதம் ஒருதலைப்பட்சமாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு, 2025-26 கூடுதல் செலவின மானிய கோரிக்கைகள் மீது விவாதமின்றி பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டு, நிதி ஒதுக்க சட்ட முன்வடிவு அறிமுகம் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும்.
அதேபோல, 2026-27 செலவின முன்பண மானிய கோரிக்கைகள் மீதும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, சட்ட முன்வடிவு நிறைவேற்றப்படும். இறுதியாக அரசின் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட பிறகு, பேரவை காலவரையறையின்றி ஒத்திவைக்கப்படும்.
இடைக்கால பட்ஜெட்டை அதிமுக 'காது குத்தும் விழா' என்று கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், பதிலுரையை புறக்கணிப்பது மூலம் தங்கள் எதிர்ப்பை வலுப்படுத்தியுள்ளனர். இது தேர்தல் நெருங்கும் சூழலில் திமுக அரசுக்கு பெரும் சவாலாக அமையும் என அரசியல் வட்டாரங்கள் கருத்து தெரிவித்துள்ளன.
பாஜகவும் இணைந்து புறக்கணித்தது கூட்டணி அரசியலில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தலாம். மக்கள் மத்தியில் இந்த புறக்கணிப்பு பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பிப்., 5-ல் கூடுகிறது தமிழக அமைச்சரவை! பிப்.,13ல் இடைக்கால பட்ஜெட்! எகிறும் எதிர்பார்ப்பு!