ரூ.100 கோடிப்பே... ஊழலுக்கு பிள்ளையார் சுழி போட்ட தவெக?... எம்.ஆர்.ஐ. இயந்திர கொள்முதலில் தில்லுமுல்லு...!
எம்.ஆர்.ஐ. கொள்முதல் டெண்டர் குறித்து பல்வேறு சந்தேகங்கள் மற்றும் கேள்விகள் முன்வைக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு
தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளுக்காக புதிய எம்.ஆர்.ஐ. (MRI) இயந்திரங்களை கொள்முதல் செய்யும் திட்டம் தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. குறிப்பாக, "மேக் இன் இந்தியா" திட்டத்தின் கீழ் உள்நாட்டில் தயாரிக்கப்படும் எம்.ஆர்.ஐ. இயந்திரங்கள் குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய சூழலில், அதிக விலையிலான கொள்முதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக மருத்துவத் துறை வட்டாரங்களில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அரசு மருத்துவ சேவைகளை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளுக்காக 29 புதிய எம்.ஆர்.ஐ. இயந்திரங்களை வாங்க தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கான டெண்டர் அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், டெண்டரில் பங்கேற்ற நிறுவனங்களின் விலை விவரங்களை ஆய்வு செய்த சில நிபுணர்கள், கொள்முதல் விலையில் கணிசமான வேறுபாடுகள் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளனர். ஒரு இயந்திரத்திற்கு ரூ.7 கோடி முதல் ரூ.15 கோடி வரை செலவிட திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், இந்தியாவில் தயாரிக்கப்படும் CDSCO அங்கீகாரம் பெற்ற 1.5T திறனுடைய எம்.ஆர்.ஐ. இயந்திரங்கள் ரூ.5 கோடி அல்லது அதற்கும் குறைவான விலையில் கிடைப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: "இந்திய ஜனநாயகத்தின் பெருமை"... குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து..!!
மேலும், அதிக விலைக்கு வாங்கப்படவுள்ள சில இயந்திரங்கள் தொழில்நுட்ப ரீதியாக சிறந்த மாற்றுகளுடன் ஒப்பிடும்போது குறைவான திறன் கொண்டதாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. உள்நாட்டு தயாரிப்பு இயந்திரங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டால், தமிழக அரசுக்கு ரூ.75 கோடி முதல் ரூ.100 கோடி வரை கூடுதல் செலவை தவிர்க்க முடியும் என மருத்துவத் துறையைச் சேர்ந்த சில நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதேநேரத்தில், டெண்டர் நடைமுறையில் போதிய வெளிப்படைத்தன்மை இல்லை என்ற குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ஒப்பந்த ஆவணங்களில் இயந்திரங்களை வழங்கும் நிறுவனங்களின் பெயர்கள் இடம்பெற்றாலும், அவற்றின் தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் தயாரிப்பு சார்ந்த முழுமையான தகவல்கள் இடம்பெறவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக தேசிய பாதுகாப்பு மற்றும் தரவு இறையாண்மை குறித்த கவலைகளும் எழுப்பப்பட்டுள்ளன.
மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் தொடர்பாக தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் எதிர்கொள்ளும் சர்ச்சை இது முதல்முறையல்ல என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது. முன்னதாக சி.டி. ஸ்கேனர் கொள்முதல் டெண்டர் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் 2026 ஜூன் 30 வரை இடைக்காலத் தடை விதித்திருந்தது. அந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
மத்திய அரசின் "மேக் இன் இந்தியா" கொள்கையின்படி, உள்நாட்டு உற்பத்தியாளர்கள் அனைத்து அரசு டெண்டர்களிலும் பங்கேற்க உரிமை பெற்றுள்ளனர். மேலும், இந்தியாவில் தயாரிக்கப்படும் உபகரணங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் கொள்முதல் நடைமுறைகளும் அமலில் உள்ளன.
இத்தகைய சூழலில், தற்போதைய எம்.ஆர்.ஐ. டெண்டர் நடைமுறையில் உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு உரிய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே சி.டி. ஸ்கேனர் டெண்டர் விவகாரம் நீதிமன்றத்தை எட்டிய நிலையில், தற்போது எம்.ஆர்.ஐ. கொள்முதல் தொடர்பான விவகாரமும் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ரீல்ஸ்- ஆ முக்கியம்..! CM விஜயே இதை ஏத்துக்க மாட்டாரு..! கொந்தளித்த அண்ணாமலை..!