திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட முக்கிய திட்டம் திடீர் நிறுத்தம்... தவெக அரசு தடாலடி உத்தரவு... என்ன காரணம்?
கோவளத்தில் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மாமல்லன் நீர்த்தேக்கத் திட்டப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
சென்னை புறநகரின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக கடந்த திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மாமல்லன் நீர்த்தேக்கத் திட்டப் பணிகளை தமிழக வெற்றி கழக அரசு தற்போது நிறுத்தி வைத்துள்ளது.
இந்தத் திட்டத்தைப் பொறுத்தவரையில், நாளொன்றுக்கு சென்னை மற்றும் புறநகரப் பகுதிகளுக்கு 170 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்க திட்டமிடப்பட்டு, சுமார் ரூ.342 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டது.
குறிப்பாக, சென்னை புறநகரில் வசிக்கும் மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்தத் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டன.
இதையும் படிங்க: ஏன் பதறுர..? ஊழல்-னு சொன்னாலே திமுகவுக்கு பயம் வருதே..! தவெக கடும் விமர்சனம்.!!
தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த மு.க. ஸ்டாலின் கடந்த ஜனவரி மாதம் இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். அதன்படி, திட்டப் பணிகள் தொடங்கப்பட்டு, முதல் கட்டமாக சுமார் 15 சதவீத பணிகள் தற்போது வரை நிறைவடைந்துள்ளன.
இந்நிலையில், புதிதாக ஆட்சிக்கு வந்த தமிழக வெற்றி கழக அரசு தற்போது மாமல்லன் நீர்த்தேக்கப் பணிகளை நிறுத்தி வைத்துள்ளது. இதன் காரணமாக, கடந்த ஒரு வாரமாக கரை அமைக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டபோது, திட்டத்தின் வடிவமைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்வதற்காக உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்தக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்டப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, தமிழக வெற்றி கழக அரசைப் பொறுத்தவரையில், பரந்தூர் விமான நிலையத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சில திட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அதன் தொடர்ச்சியாக, சென்னை மற்றும் சென்னை புறநகர்ப் பகுதிகளுக்கு குடிநீர் வழங்குவதற்கான மிக முக்கியமான மாமல்லன் நீர்த்தேக்கத் திட்டத்தையும் தற்போது ஆய்வு என்ற பெயரில் நிறுத்தி வைப்பதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
இதையும் படிங்க: #BREAKING திமுக முப்பெரும் விழா விருதுகள் அறிவிப்பு... பெரியார், அண்ணா, கலைஞர் விருதுகள் யாருக்கு?