மம்தா எடுத்துச் சென்ற புத்தகங்கள் எங்கே? ‘செக்’ வைத்த பாஜக! தாகூர் நூல்கள் விவகாரத்தில் வெடித்த சர்ச்சை!
நூலகப் பதிவுகளில் புத்தகங்கள் திரும்பப் பெறப்பட்டதாக பதிவு செய்ய, அவை முறையாக நூலகத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
கொல்கத்தா: மேற்குவங்க முன்னாள் முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, அரசியலைத் தாண்டி ஓவியம், கவிதை, புத்தக வாசிப்பு ஆகியவற்றிலும் ஆர்வம் கொண்டவர். ஆனால், அவர் சட்டசபை நூலகத்தில் இருந்து எடுத்துச் சென்றதாக கூறப்படும் புத்தகங்கள் தற்போது அரசியல் சர்ச்சையாக மாறியுள்ளன.
மம்தா பானர்ஜியின் பெயரில் மேற்குவங்க சட்டசபை நூலகத்தில் இருந்து வழங்கப்பட்ட 19 புத்தகங்கள் இதுவரை திரும்ப ஒப்படைக்கப்படவில்லை என மாநில நூலகத்துறை அமைச்சர் கவுரி சங்கர் கோஷ் தெரிவித்துள்ளார். இந்த புத்தகங்களில் நோபல் பரிசு பெற்ற கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் ‘ரபீந்திர ரச்சனாவளி’யின் 18 தொகுதிகளும், ‘சஞ்சயிதா’ என்ற கவிதைத் தொகுப்பும் அடங்கும்.
புத்தகங்களை திருப்பி வழங்க வேண்டிய காலக்கெடு முடிந்துவிட்டதாகவும், முன்னாள் முதல்வர் என்பதற்காக தனி விதி எதுவும் கிடையாது என்றும் அமைச்சர் கூறியுள்ளார். இதனால், மம்தா பானர்ஜியிடம் இருந்து புத்தகங்களை அதிகாரப்பூர்வமாக திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது.
இதையும் படிங்க: மம்தா அணியின் அதிரடி வழக்கு! திரிணாமுல் காங்கிரசுக்கு மீண்டும் அதிர்ச்சி! உச்ச நீதிமன்ற நோட்டீஸால் பரபரப்பு!
இதற்கிடையே, இந்த விவகாரம் குறித்து மம்தா தரப்பில், புத்தகங்கள் தனது வீட்டில் இல்லை என்றும், அவை முதல்வரின் அதிகாரப்பூர்வ அறையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், நூலகப் பதிவுகளில் புத்தகங்கள் திரும்பப் பெறப்பட்டதாக பதிவு செய்ய, அவை முறையாக நூலகத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதையே பாஜக அரசியல் ரீதியாகவும் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. மம்தா ஆட்சியில் இருந்தபோது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி நூலகங்களில் அவரது படைப்புகளை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. 2025-ல் பள்ளி நூலகங்களுக்கான பரிந்துரைப் பட்டியலில் மம்தா எழுதிய புத்தகங்களும் இடம்பெற்றிருந்தன.
தற்போது ஆட்சி மாறியுள்ள நிலையில், மம்தா பானர்ஜி எழுதிய புத்தகங்களை அரசு மற்றும் பொது நூலகங்களில் இருந்து அகற்ற பாஜக அரசு முடிவு செய்துள்ளது. மாணவர்களின் அறிவு மற்றும் அறிவுசார் வளர்ச்சிக்கு பயன்படும் புத்தகங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என நூலகத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ரவீந்திரநாத் தாகூர், காஜி நஸ்ருல் இஸ்லாம், சுவாமி விவேகானந்தர் உள்ளிட்டோரின் படைப்புகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும் என அரசு தரப்பு கூறியுள்ளது.
ஒரே நேரத்தில் மம்தாவின் பெயரில் நிலுவையில் உள்ள தாகூர் புத்தகங்கள் குறித்த சர்ச்சையும், அவரது சொந்த புத்தகங்களை நூலகங்களில் இருந்து அகற்றும் அரசின் முடிவும் மேற்குவங்க அரசியலில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், ஒரு சாதாரண நூலக விவகாரம் தற்போது மம்தா-பாஜக மோதலின் மற்றொரு அரசியல் ஆயுதமாக மாறியுள்ளது.
இதையும் படிங்க: ஹோட்டலில் அதிகாலை பயங்கர தீ விபத்து: 7 பேர் உடல் கருகி பலி! தப்பிக்க முடியாமல் சிக்கிய மக்கள்!