ஜனநாயகன் படத்துக்கு ஏன் இவ்வளவு தடை? விஜய்க்காக சென்சார் போர்டை சாடிய மன்சூர்!
ஜனநாயகன் படத்தில் உண்மையைச் சொன்னால் சென்சார் போர்டுக்கு ஏன் கோபம் வருகிறது? விஜய்யின் வளர்ச்சியைப் பார்த்துப் பயப்படுகிறார்கள் என மன்சூர் அலிகான் விமர்சித்துளார்.
தளபதி விஜய்யின் படங்களை நான் எப்போதும் எனது குடும்பத்தோடு முதல் நாளே பார்த்துவிடுவேன். ஆனால், ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை அப்படிப் பார்க்க முடியவில்லை; அதில் பல அரசியல் இருக்கிறது என நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.
சென்னை வடபழனியில் அட்டகத்தி தினேஷ் மற்றும் மன்சூர் அலிகான் நடித்துள்ள ‘கருப்பு பல்சர்’ திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய மன்சூர் அலிகான், சென்சார் போர்டு கெடுபிடிகள், விஜய்யின் பட விவகாரம் மற்றும் ‘பராசக்தி’ படத்தின் விமர்சனம் எனப் பல விஷயங்களைச் தனது பாணியில் ‘வெளுத்து’ வாங்கினார்.
விழாவில் பேசிய மன்சூர் அலிகான், “1994-95 காலகட்டத்தில் நான் எடுத்த ‘வாழ்க ஜனநாயகம்’ படத்திற்கும் சென்சார் போர்டு இதேபோலத்தான் முட்டுக்கட்டை போட்டது. பெட்டியைத் தூக்கிக்கொண்டு டெல்லி வரை சென்று போராடித்தான் சான்றிதழ் வாங்கி வந்தேன்” எனத் தனது பழைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார். சென்சார் அதிகாரிகள் மற்றும் நீதிபதிகள் மீதான ஊழல் புகார்களைச் சுட்டிக்காட்டிய அவர், “அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா” என கிண்டலாகக் குறிப்பிட்டார். மேலும், விலங்கு நல வாரிய அலுவலகத்தை அடையாறிலிருந்து ஹரியானாவிற்கு மாற்றியதால் சினிமா துறையினர் சந்திக்கும் இன்னல்களையும் அவர் சாடினார்.
இதையும் படிங்க: விஜய்யை வஞ்சக வலையில் வீழ்த்த பாஜக முயற்சி! தவெக-வுக்கு முத்தரசன் எச்சரிக்கை!
சக நடிகர் தினேஷ் குறித்துப் பேசுகையில், “அவர் இன்னொரு விக்ரம் மாதிரி; இந்தச் சினிமாவிற்குப் பிட்டாகாத அளவிற்கு மிகவும் எளிமையான மனிதர்” எனப் புகழ்ந்து தள்ளினார். பொங்கலுக்கு வெளியாக வேண்டிய ‘கருப்பு பல்சர்’ திரைப்படம், பெரிய படங்களின் போட்டி காரணமாகத் தள்ளிப்போனது தனக்கு வருத்தமளிப்பதாகவும் தெரிவித்தார். சமீபத்தில் வெளியான ‘பராசக்தி’ படம் குறித்துக் கருத்துத் தெரிவித்த மன்சூர், “படம் அசத்தலாக உள்ளது; அதர்வா மிகச் சிறப்பாக நடித்துள்ளார், ஆனால் சிவகார்த்திகேயனுக்குத் தீனி போதவில்லை” என விமர்சித்தார். “இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிர்த் தியாகம் செய்தது வரலாறு; அதற்காகத் தற்போது காங்கிரஸ் சண்டையிட்டுக் கொள்வது காலத்தின் கட்டாயம்” என்றும் அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: "நாளைக்கு காலையில 10:30-க்கு தான் தீர்ப்பு!" ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா? ஆகாதா? கோர்ட் சொல்லப்போகும் அந்த பதில்!