2026-ல் அதே ஈரோடு கிழக்கு தேர்தல் பாணி! கரூரில் தயாராகும் பட்டிகள்! வேலைய காட்டும் திமுக!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பாணியில், கரூர் தொகுதியில் பட்டிகளை அமைத்து, அதில் வாக்காளர்களை தங்க வைத்து பணம் கொடுக்க, தி.மு.க.,வினர் ஏற்பாடு செய்வதாக அ.தி.மு.க.,வினர் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
கரூர் சட்டசபைத் தொகுதியில் வாக்காளர்களை இரும்பு ஷெட் கொட்டகைகளில் (பட்டிகளில்) அடைத்து வைத்து தினசரி பணம் வழங்க தி.மு.க. தரப்பு திட்டமிட்டுள்ளதாக அதிமுக தரப்பினர் கடும் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர். இது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பாணியில் நடைபெறுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
வரும் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் கரூர் தொகுதியில் தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் போட்டியிட வாய்ப்பு உள்ளது. இந்நிலையில், தொகுதியில் உள்ள நகர்ப்புற வார்டுகள் மற்றும் கிராம பஞ்சாயத்துகளில் பல இடங்களில் இரும்பு ஷெட் கொட்டகைகள் அமைக்கப்பட்டு வருவதாக அதிமுக புகார் அளித்துள்ளது.
அதிமுக எம்.பி. இன்பதுரை, சென்னையில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தார். “கரூர் தொகுதியில் மட்டும் 48 இடங்களில் தேர்தல் அலுவலகம் என்ற பெயரில் பட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. சுழற்சி முறையில் வாக்காளர்களை அங்கு தங்க வைத்து தினமும் பணம் வழங்க தி.மு.க. திட்டமிட்டுள்ளது” என்று அவர் கூறினார்.
இதையும் படிங்க: தவெக தலைவர் விஜய் முதல்வராக டெல்லி ஆசைப்பட்டது! திரைமறைவில் நடந்த பேரம்!! புட்டு புட்டு வைத்த ஆதவ் அர்ஜூனா!
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் மாவட்ட தேர்தல் அலுவலரிடம் புகார் அளித்தார். “100க்கும் மேற்பட்ட இடங்களில் பட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. இது 2021 தேர்தலிலும், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலிலும் பயன்படுத்தப்பட்ட அதே உத்தி” என்றார்.
இந்தப் புகார்களுக்கு எதிரொலியாக, கரூர் அருகே பெரியகோதூர் பகுதியில் கல்யாண பசுபதீஸ்வரர் கோயில் மற்றும் வெண்ணைமலை பாலசுப்ரமணிய சுவாமி கோயில் நிலங்களில் அமைக்கப்பட்ட இரும்பு ஷெட்கள் நேற்று அகற்றப்பட்டன.
இதற்கிடையே, கரூர் மாநகராட்சி துணை மேயர் தாரணி சரவணன், “தி.மு.க. சார்பில் 9 தேர்தல் பணிமனைகள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளன. மற்ற இடங்களில் சுயேச்சை வேட்பாளர்களோ அல்லது தனிப்பட்ட விழாக்களுக்காகவோ ஷெட்கள் இருக்கலாம்” என்று விளக்கம் அளித்தார்.
கரூர் தொகுதி 2016-ல் பணப் பட்டுவாடா காரணமாக அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்ட வரலாறு கொண்டது. இந்த முறையும் பண அரசியல் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளதால், தேர்தல் களம் பரபரப்பாக மாறியுள்ளது.
இதையும் படிங்க: அதிகாரிகள் பின்னாடி மறையாதீங்க ஸ்டாலின்! மக்களுக்கு விளக்கம் கொடுங்க! அண்ணாமலை காட்டம்!