திமுக ஆட்சியில் பிறப்பித்த உத்தரவு! புத்துயிர் கொடுத்தார் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா! அதிகாரிகள் ஷாக்!
தமிழக நெடுஞ்சாலைத்துறையை மறுசீரமைப்பு செய்து முந்தைய தி.மு.க., அரசு பிறப்பித்த உத்தரவை, தற்போதைய த.வெ.க., அரசு செயல்படுத்தாது என்கிற எண்ணத்தில் அதிகாரிகள் இருந்தனர்.
சென்னை: தமிழக நெடுஞ்சாலைத் துறையை மறுசீரமைப்பு செய்ய முந்தைய தி.மு.க. அரசு பிறப்பித்த உத்தரவை செயல்படுத்த மாட்டோம் என நினைத்திருந்த அதிகாரிகளுக்கு, போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெரும் அதிர்ச்சி கொடுத்துள்ளார். அரசாணையை உடனடியாக நடைமுறைப்படுத்த உத்தரவிட்டதால் அதிகாரிகள் திகைத்துப் போனதாக தகவல் வெளியாகியுள்ளது.
நெடுஞ்சாலைத் துறையில் கட்டுமானம்-பராமரிப்பு, நபார்டு, கிராமச்சாலைகள், சிறப்புத் திட்டங்கள், தரக்கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் உள்ளன. இவை அனைத்தின் தலைமை அலுவலகங்களும் சென்னையில் மட்டுமே செயல்பட்டு வருகின்றன. இதனால் கீழ்மட்ட அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் பணி தொடர்பாக அடிக்கடி சென்னை வருவது, நேர விரயத்தையும், பணி தாமதத்தையும் ஏற்படுத்தி வந்தது.
இதைத் தவிர்க்கும் வகையில், பொதுப்பணித்துறை, மின்வாரியம், குடிநீர் வடிகால் வாரியம் போன்றவற்றில் உள்ள மண்டல அமைப்பைப் போல நெடுஞ்சாலைத் துறையிலும் சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய நான்கு இடங்களில் மண்டல அலுவலகங்கள் உருவாக்கப்பட்டன. தலைமைப் பொறியாளருக்கு கீழ் பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஜூன் 15 முதல் செயல்பாட்டுக்கு வரும் வகையில் மார்ச் 13 அன்று அரசாணை வெளியிடப்பட்டது.
இதையும் படிங்க: சி.எம்.விஜய் போட்ட அதிரடி உத்தரவு... கோவையில் தீயாய் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா...!
இதில் சிறப்புத் திட்டங்கள் பிரிவு கலைக்கப்பட்டது. நபார்டு, கிராமச்சாலைகள், திட்டங்கள், பெருநகரப் பிரிவுகள் ஆகியவை கட்டுமானம்-பராமரிப்புப் பிரிவுடன் ஒருங்கிணைக்கப்பட்டன. பணியாளர்கள் வெவ்வேறு பிரிவுகளுக்கு மாற்றப்பட்டனர். புதிய பணியிடங்கள் உருவாக்கப்படவில்லை.
முந்தைய அரசு பிறப்பித்த உத்தரவு என்பதால், தற்போதைய த.வெ.க. அரசு இதைச் செயல்படுத்தாது என அதிகாரிகள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் கவனத்துக்கு இந்த அரசாணை கொண்டு செல்லப்பட்டதும், அவர் உடனடியாக செயல்படுத்த உத்தரவிட்டார். இதனால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். வேறு வழியின்றி, நேற்று அரசாணையில் குறிப்பிடப்பட்ட பணியிடங்களில் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இந்த மறுசீரமைப்பு மூலம் மண்டல அளவில் பணிகள் விரைவாகவும், திறமையாகவும் மேற்கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்களுக்கான சாலைப் பணிகள் துரிதப்படுத்தப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கொளத்தூர் மக்கள் கேடுகெட்டவர்கள்! அடித்து விரட்டுவோம்! அனிதா ராதாகிருஷ்ணன் சர்ச்சை பேச்சு!