"முடிஞ்சா..." - திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ஓபன் சவால் விட்ட ஆதவ் அர்ஜுனா...!
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் தவெகவின் இந்த வெற்றி கவர்ச்சியால் கிடைத்தது என்கின்றனர்.
சென்னையில் நடந்த கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன்னாள் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கவர்ச்சியைக் காட்டி தான் ஜெயித்தார்கள் என சொன்னால் முதலமைச்சர் விஜய்க்கு கோபம் வருகிறது. கவர்ச்சி இல்லாமல் வேற எதை வைத்து ஜெயித்தீர்கள்? என சரமாரியாக கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு பொதுப் பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதிலடி கொடுத்துள்ளார். சென்னை ஆர்.கே.நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், முன்னாள் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும், முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் தவெகவின் இந்த வெற்றி கவர்ச்சியால் கிடைத்தது என்கின்றனர். கவர்ச்சி தான் வெற்றிக்கு காரணம் என்றால், அதே காரணத்திற்காகவே உங்கள் மகன் உதயநிதி ஸ்டாலினை சினிமாவில் அறிமுகப்படுத்தினீர்கள். ஆனால் அவருக்கு சினிமாவிலும் முழுமையான வெற்றி கிடைக்கவில்லை; படிப்பிலும் சாதிக்கவில்லை; கடைசியாக அரசியலிலும் வெற்றி கிடைக்கவில்லை என்றார்.
பிறப்பால் ஒருவர் தலைவராகவோ முதலமைச்சராகவோ உருவாகக் கூடாது; மன்னராட்சி மனப்பான்மை ஒழிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் ஆரம்பத்திலிருந்தே கூறி வந்தோம். இந்தத் தேர்தலில் பெண்களும் இளைஞர்களும் அந்த மன்னராட்சி மனப்பான்மையை நிராகரித்துள்ளனர். அறிஞர் அண்ணா உருவாக்கிய இயக்கம், கலைஞர் கருணாநிதி 50 ஆண்டுகளுக்கும் மேலாக கட்டிக்காத்த இயக்கமாகிய திமுகவிற்கு, இதுவரை இல்லாத அளவிலான தோல்வி ஏற்பட்டுள்ளது. திமுக பல தேர்தல்களில் தோல்வியை சந்தித்திருக்கலாம். ஆனால், கலைஞர் கருணாநிதி தலைமையில் இருந்தபோது கட்சித் தலைவர் நேரடியாக தோல்வியடைந்ததில்லை. முதலமைச்சராக இருந்த ஒருவர் தேர்தலில் தோல்வியடைந்த வரலாறும் இல்லை.
இதையும் படிங்க: போதை பொருள் விற்றால் குண்டர் சட்டம்! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா எச்சரிக்கை!
மு.க. ஸ்டாலின் அவர்களே, உங்கள் தோல்விக்கான காரணத்தை மீண்டும் சிந்தித்துப் பாருங்கள். தேர்தல் வெற்றி என்பது கவர்ச்சியால் வருவதல்ல; மக்களின், குறிப்பாக பெண்களின் நம்பிக்கையால் கிடைப்பதாகும். அந்த நம்பிக்கையையும் அன்பையும் உருவாக்குவதே ஒரு தலைவரின் கடமையாகும். இந்தத் தேர்தலில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தோல்வியடைந்தார். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தோல்வியடைந்தார். ஒரு சாதாரண இளைஞரிடம் திமுகவின் பொதுச்செயலாளர் தோல்வியடைந்தார். மேலும், திமுக பொருளாளரின் மகனும் தோல்வியடைந்தார்.
அதாவது திமுக தலைவர், பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளரின் மகன் ஆகியோர் தோல்வியடைந்த ஒரே தேர்தலாக 2026 தேர்தல் அமைந்துள்ளது. இதை சாத்தியப்படுத்தியது எங்கள் தலைவர்ஜோசப் விஜய். இதை வேறு எந்த தலைவராலும் சாதிக்க முடியவில்லை. இது கவர்ச்சியால் கிடைத்த வெற்றி அல்ல. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அப்படியே நினைத்துக் கொண்டிருந்தால், தொடர்ந்து அப்படியே நினைத்துக் கொள்ளலாம். தமிழக வெற்றி கழகத்தையும் எங்கள் தலைவரையும் தொடர்ந்து குறைத்து மதிப்பிடலாம்.
‘சில இளைஞர்கள் மட்டுமே உள்ள கட்சி’, ‘கட்சி கட்டமைப்பு இல்லை’, ‘பூத் அமைப்பு இல்லை’ என்று கூறினார்கள். ஆனால் தேர்தல் நாளில் 75 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் பெரும்பாலான இடங்களில், குறிப்பாக பெண்கள் பங்கேற்ற வலுவான அமைப்புடன், வாக்குப்பதிவு முடிந்து இயந்திரங்கள் எடுத்துச் செல்லப்படும் வரை, எண்ணிக்கை முகவர்கள் பணியை முடிக்கும் வரை தமிழக வெற்றி கழகத்தினர் பணியாற்றினர்.
மு.க. ஸ்டாலின் அவர்களே, உங்களைச் சுற்றி இருப்பவர்களின் தகவல்களை மட்டும் நம்பாமல், நேரடியாக கள நிலவரத்தை அறிந்துகொள்ளுங்கள். அதுதான் நான் சொல்ல விரும்புவது எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ரீல்ஸ் வெறியால் தவெக எம்.எல்.ஏ. செய்த காரியம்... குறைகளை கொட்டித் தீர்க்க வந்த மக்கள் ஆத்திரம்...!