"முதல்ல தேர்தலைச் சந்திக்கட்டும்.. அப்புறம் பேசலாம்!" தவெகவை வம்பிழுத்த திமுக அமைச்சர்!
விஜய் முதலில் தேர்தலைச் சந்தித்து தனது பலத்தை நிரூபிக்கட்டும் என அமைச்சர் ஐ.பெரியசாமி சவால் விடுத்துள்ளார்.
தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் மீதான சிபிஐ விசாரணை பற்றிச் சொல்ல ஒன்றுமில்லை; அவர் முதலில் தேர்தலைச் சந்திக்கட்டும், அப்போதுதான் அவருக்குப் பின்னால் உள்ள பலம் என்ன என்பது தெரியும் என ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்ட திமுக அலுவலகத்தில் இன்று நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் பங்கேற்ற அமைச்சர், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, கூட்டணி ஆட்சி விவகாரத்தில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகையின் விமர்சனம், அண்ணாமலையின் நிதி மேலாண்மை புகார்கள் மற்றும் விஜய்யின் அரசியல் களம் குறித்துத் தனது பாணியில் அதிரடியாகப் பதிலளித்தார். பொங்கல் முடிவதற்குள் மகளிருக்குக் கிடைக்கவுள்ள ‘இனிப்பான செய்தி’ குறித்தும் அவர் சூசகமாகத் தெரிவித்தார்.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, "ஆட்சியில் பங்கு இல்லை என்பது எனது தனிப்பட்ட கருத்து எனச் செல்வப்பெருந்தகை கூறியிருக்கலாம். ஆனால், ஆட்சியில் பங்கு இருக்கிறதா, இல்லையா என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மட்டுமே முடிவு செய்வார்; அந்த முடிவுதான் இறுதியானது" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார். விஜய் குறித்த கேள்விக்கு, "தேர்தலைச் சந்தித்த பின்னர்தான் ஒரு கட்சியின் பலத்தைத் தோராயமாகக் கூடச் சொல்ல முடியும். அதுவரை எதையும் கணிக்க முடியாது" என்றார். மேலும், திமுக சரித்திரத்திலேயே இல்லாத வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றி பெற்று வருவதாகவும், 2026-ல் இதுவரை இல்லாத புதிய சாதனையைப் (Record Break) படைப்பார் என்றும் நம்பிக்கையோடு தெரிவித்தார்.
இதையும் படிங்க: "6 மணி நேர விசாரணை நிறைவு!" சிபிஐ அலுவலகத்திலிருந்து வெளியே வந்த விஜய்! நாளையும் ஆஜராக உத்தரவு!
தமிழகத்தின் நிதி நிலை குறித்து அண்ணாமலை எழுப்பிய புகார்களுக்குப் பதிலளித்த அவர், "அண்ணாமலை நிதி மேலாண்மை பற்றிக் கவலைப்படத் தேவையில்லை; அதிமுக ஆட்சியைப் போல இங்கே குளறுபடி இல்லை. நிதி நிலையைச் சிறப்பாகக் கையாளுவதில் இந்தியாவிலேயே தமிழக அரசுதான் முதலிடத்தில் உள்ளது" எனச் சாடினார். பொங்கல் பரிசுத் தொகை வழங்குவதால் விவசாயக் கடன்களுக்குப் பாதிப்பு வராது என்றும் அவர் தெளிவுபடுத்தினார். ராமதாஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் திமுக ஆட்சியைப் பாராட்டியுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், "உள்ளத்தில் இருந்து உண்மையைச் சொல்லியிருக்கிறார்கள்" என்றார். நிறைவாக, விடுபட்ட தகுதியுள்ள பெண்களுக்கு விரைவில் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்ற ‘இனிப்பான’ செய்தியையும் அவர் பகிர்ந்து கொண்டார்.
இதையும் படிங்க: ஜனநாயகன் படத்துக்கு ஏன் இவ்வளவு தடை? விஜய்க்காக சென்சார் போர்டை சாடிய மன்சூர்!