இனி இவர்களுக்கு மின் இணைப்பு கிடைக்குமா?... புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கு அமைச்சர் முக்கிய அறிவிப்பு...!
அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கு விதிமுறைகளுக்கு உட்பட்டு மின் இணைப்புகள் வழங்கப்படும் என்று அமைச்சர் நிர்மல் குமார் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் மேய்ச்சல் நிலங்கள், நீர்நிலைகள், ரயில்வே நிலங்கள் மற்றும் ராணுவத்துக்குச் சொந்தமான நிலங்களைத் தவிர்த்து, அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கு விதிமுறைகளுக்கு உட்பட்டு மின் இணைப்புகள் வழங்கப்படும் என்று அமைச்சர் நிர்மல் குமார் அறிவித்துள்ளார்.
ஒரு யூனிட் மின்சாரம் ரூ.35-க்கு வாங்கப்படவில்லை என்றும், உண்மையில் ரூ.32-க்குத்தான் கொள்முதல் செய்யப்படுவதாகவும் அவர் விளக்கமளித்தார்.
“நீங்கள் குறிப்பிடும் ரூ.35 என்பது டெண்டர் விகிதத்தின் அடிப்படையில் கணக்கிடப்பட்ட தொகை. நாங்கள் இறுதி செய்த விலை ரூ.33.47 அல்ல; ஒரு யூனிட்டுக்கு ரூ.32 என முடிவு செய்துள்ளோம். இதுதொடர்பாக இன்னும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். மின்சார உற்பத்திச் செலவு ரூ.29 ஆகும்” என்று அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: செஞ்சியில் காணாமல் போன சிறுமி..! தகவல் கொடுத்தால் ரூ.2 லட்சம் சன்மானம்..!தவெக மா.செ. அறிவிப்பு!
அப்போது, “நீங்கள் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கினாலும், நுகர்வோரிடம் அதிக கட்டணம் வசூலிப்பதில்லையா?” என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த அமைச்சர், “அதற்காக நாங்கள் கூடுதல் கட்டணம் வசூலிக்க முடியாது. அவை மின்வாரியத்துக்கு ஏற்படும் கூடுதல் செலவுகள். அரசு பேருந்துகளில் பெண்களுக்கு மானியம் வழங்குவதைப் போலவே, இதற்காகவும் மற்றவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதில்லை. எனவே, இதற்கும் மின் கட்டண உயர்வுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கு சில நிபந்தனைகளின் அடிப்படையில் மின் இணைப்பு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்கான விண்ணப்பங்களைப் பெறத் தொடங்க உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
“இதை ஒரு பெரிய மாற்றமாகக் கருதுகிறோம். ஏனெனில், ஒவ்வொரு நகரத்திலும் புறம்போக்கு நிலங்களில் மக்கள் வசிப்பதைக் காண முடிகிறது. இதுதொடர்பாக சில விதிவிலக்குகளை வழங்கியுள்ளோம்.
மேய்ச்சல் புறம்போக்கு நிலங்கள், நீர்நிலைகள், ரயில்வே நிலங்கள் மற்றும் ராணுவப் பாசறைப் பகுதிகளில் மட்டும் எங்களால் மின் இணைப்புகளை வழங்க முடியாது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவு உள்ளது.
எதிர்ப்பு இல்லாத மற்ற இடங்களில் மின் இணைப்புகளை வழங்க வழிவகை செய்துள்ளோம். இனிமேல், அத்தகைய பகுதிகளில் வசிப்பவர்கள் மின் இணைப்புக்காக விண்ணப்பித்து, அதைப் பெற்றுக்கொள்ளலாம்” என்று அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.
இதையடுத்து, விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வார்களா என்று கேள்வி எழுப்பப்பட்டபோது, “விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளலாம். இதை உங்களுக்குத் தெரிவிக்கிறோம்” என்று அவர் பதிலளித்தார்.
இதையும் படிங்க: வாழ்வதா.. நாண்டுகிட்டு சாவதா.?..! நல்லாட்சியா.. நாடக ஆட்சியா.? கொந்தளித்த வேல்முருகன்.!!