×
 

கோவிலுக்குள் இனி வீடியோ, போட்டோ எடுக்காதீங்க! இருகரம் கூப்பி அமைச்சர் ரமேஷ் வேண்டுகோள்!

கோவிலுக்கு வரும் பக்தர்களின் கவனம் இறைவன் மீது இருக்க வேண்டும் என்றும், மொபைல் போன் பயன்படுத்துவது அவசியமற்றது என்றும் அமைச்சர் கூறினார்.

கோவில்களின் புனிதத் தன்மையை பாதுகாக்கும் வகையில், கோவில் வளாகத்திற்குள் வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுப்பதை ஊடகத்தினர் தவிர்க்க வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் கேட்டுக்கொண்டுள்ளார். குறிப்பாக கருவறை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாவது தொடர்பாக அவர் கவலை தெரிவித்தார்.

திருச்சி ஸ்ரீரங்கத்தில் கடந்த 3 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த ரங்கநாதர் கோவில் கிழக்கு வாசல் கோபுரம் நேற்று பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டது. இதனை அமைச்சர் ரமேஷ் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆட்சி அமைந்த குறுகிய காலத்திலேயே பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு கோபுரம் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

கோவில் நிலங்கள் மற்றும் அறக்கட்டளை சொத்துகளை பாதுகாப்பதில் அறநிலையத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் கூறினார். கோவில் சொத்துகள் முறைகேடாக பயன்படுத்தப்படுவது தொடர்பான தகவல்கள் கிடைத்தவுடன் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: திமுக–பாஜக திடீர் நெருக்கம்?! முதல்வர் விஜய் தொகுதி மறுவரையறை கூட்டம் கூட்டியதன் பின்னணியில் பரபரப்பு!

பழனி மற்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிலம் தொடர்பான விவகாரங்களையும் அவர் குறிப்பிட்டார். குறிப்பாக மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலம் தொடர்பான வழக்கில் கடந்த காலங்களில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், தங்களது ஆட்சியில் தகவல் கிடைத்ததும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதற்கிடையே, கோவில்களுக்குள் மொபைல் போன் பயன்படுத்துவது தொடர்பாகவும் அமைச்சர் முக்கிய தகவலை வெளியிட்டார். கோவில்களுக்குள் மொபைல் போன்களை அனுமதிக்கக்கூடாது என ஏற்கனவே நீதிமன்ற உத்தரவு இருப்பதாக குறிப்பிட்ட அவர், அதனை நடைமுறைப்படுத்துவதற்காக முதல் கட்டமாக கோவில்களில் பாதுகாப்பான மொபைல் போன் கவுண்டர்கள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

கோவிலுக்கு வரும் பக்தர்களின் கவனம் இறைவன் மீது இருக்க வேண்டும் என்றும், மொபைல் போன் பயன்படுத்துவது அவசியமற்றது என்றும் அமைச்சர் கூறினார்.

மேலும், கோவிலுக்கு வரும் பிரபலங்கள், முன்னாள் மற்றும் இந்நாள் அமைச்சர்களை ஊடகத்தினர் கோவில் வெளியே பேட்டி எடுத்து பதிவு செய்யலாம் என்றும், கோவிலுக்குள் சென்று வீடியோ எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்தார்.

“கோவிலுக்குள் வீடியோ, போட்டோ பதிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்” என இருகரம் கூப்பி மீடியா நண்பர்களிடம் அன்புடன் வேண்டுகோள் விடுப்பதாக அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார். கோவில் நிர்வாக விதிமுறைகளை செயல்படுத்த ஊடகத்தினரின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: கோவில் நிலங்களை குறிவைக்கும் மோசடி கும்பல்? இதுவரை 19 பேர் கைது! அமைச்சர் ரமேஷ் பரபரப்பு தகவல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share