பறிபோகும் சேகர் பாபு பவர்... சாட்டையை சுழற்றிய ஸ்டாலின்... திமுகவில் அதிரடி மாற்றம்...!
முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவைப் பொறுத்தவரை, திமுகவின் சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளராக இருந்து வருகிறார்.
2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், திமுகவுக்கு தனது கட்சி அமைப்பை சுயபரிசோதனை செய்து மறுசீரமைத்துக் கொள்வதற்கான சூழலை உருவாக்கியுள்ளதாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில், மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கையை 77-லிருந்து 110 ஆக திமுக உயர்த்தியுள்ள நிலையில், முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் போட்டியிட்டு தோல்வியடைந்த கொளத்தூர் தொகுதிக்கு புதிய மாவட்டச் செயலாளர் நியமிக்கப்படுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
திமுகவில் கொளத்தூர் தொகுதிக்கு புதிய மாவட்டச் செயலாளர் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் அமைச்சர் சேகர்பாபு பொறுப்பில் இருந்த கொளத்தூர் தொகுதி, தற்போது வேறு ஒருவரின் பொறுப்புக்கு செல்ல இருப்பதாகக் கூறப்படுகிறது.
பெரம்பூர் மற்றும் கொளத்தூர் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளையும் உள்ளடக்கிய புதிய மாவட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் ஒருவர் விரைவில் திமுக சார்பில் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இதையும் படிங்க: அறநிலையத்துறையை வேவு பார்க்கிறார் சேகர்பாபு! அமைச்சர் ரமேஷ் அதிரடி குற்றச்சாட்டு!
முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவைப் பொறுத்தவரை, திமுகவின் சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளராக இருந்து வருகிறார். இதற்கு முன்பு அவரது கட்டுப்பாட்டில் துறைமுகம், திரு.வி.க. நகர், எழும்பூர், வில்லிவாக்கம், கொளத்தூர், அம்பத்தூர் என ஆறு சட்டமன்றத் தொகுதிகள் இருந்தன.
சட்டமன்றத் தேர்தலின்போதும் இந்த ஆறு தொகுதிகளையும் சேகர்பாபுதான் கண்காணித்து, தேர்தல் பணிகளை மேற்கொண்டார்.
ஆனால், கொளத்தூர் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நான்காவது முறையாக போட்டியிட்டு தோல்வியைச் சந்தித்த நிலையில், சேகர்பாபு மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
குறிப்பாக, கொளத்தூர் தொகுதியில் சேகர்பாபு முறையாகக் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ளவில்லை என்றும், தேர்தல் பணிகளில் உரிய கவனம் செலுத்தவில்லை என்றும், அதன் காரணமாகவே திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தோல்வியடைந்ததாகவும் திமுகவினரே பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தனர்.
இந்த நிலையில், சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு திமுகவில் பல்வேறு அமைப்பு ரீதியான மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, திமுகவில் இருந்த 77 மாவட்டச் செயலாளர் பதவிகள் தற்போது 110 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன. சென்னையைப் பொறுத்தவரை இதுவரை ஆறு திமுக மாவட்டச் செயலாளர்கள் இருந்த நிலையில், அந்த எண்ணிக்கை தற்போது 10 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு சேகர்பாபுவின் கட்டுப்பாட்டில் ஆறு சட்டமன்றத் தொகுதிகள் இருந்த நிலையில், தற்போது சென்னை கிழக்கு மாவட்டத்தின் கீழ் மூன்று தொகுதிகள் மட்டுமே இடம்பெறுகின்றன. துறைமுகம், திரு.வி.க. நகர் மற்றும் வில்லிவாக்கம் ஆகிய மூன்று தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்ற வகையில் அமைப்பு மாற்றப்பட்டுள்ளது.
அதேபோல், தற்போதைய முதலமைச்சர் விஜய் சட்டமன்ற உறுப்பினராக உள்ள பெரம்பூர் தொகுதியையும், முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியையும் இணைத்து, புதிதாக ஒரு திமுக மாவட்டம் உருவாக்கப்பட உள்ளது.
இந்த இரண்டு தொகுதிகளையும் உள்ளடக்கிய புதிய மாவட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் ஒருவர் விரைவில் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவ்வாறு புதிய மாவட்டச் செயலாளர் நியமிக்கப்படும் பட்சத்தில், கொளத்தூர் தொகுதிக்கு புதிய மாவட்டச் செயலாளர் ஒருவர் திமுகவில் பொறுப்பேற்க உள்ளார்.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், இதுவரை சேகர்பாபுவின் கட்டுப்பாட்டில் இருந்த கொளத்தூர் தொகுதி, தற்போது அவரது பொறுப்பில் இருந்து கைமாறுகிறது. இனி பெரம்பூர் மற்றும் கொளத்தூர் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கும் சேர்த்து புதிய மாவட்டச் செயலாளர் ஒருவர் திமுகவில் நியமிக்கப்பட உள்ளார் என்பதுதான் தற்போது கிடைத்துள்ள தகவல்.
இதையும் படிங்க: திமுகவில் செல்வாக்கு இழக்கிறாரா செந்தில் பாலாஜி?... மு.க.ஸ்டாலின் கொடுத்த ஷாக்... கரூரில் காத்திருக்கும் செம்ம ட்விஸ்ட்...!