மோடியின் 25 ஆண்டுகள் ஆட்சி! செப்டம்பர் 17 முதல் பாஜக செய்யப்போகும் மெகா பிளான்!
இந்திய அரசியலில் நீண்ட காலம் ஆட்சித் தலைமையில் இருந்தவர்களில் மோடியின் இந்த பயணம் முக்கியமானதாக பா.ஜ., கருதுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் மற்றும் பிரதமர் என ஆட்சித் தலைமைப் பொறுப்பில் 25 ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளதை முன்னிட்டு, நாடு முழுவதும் ஓராண்டு காலம் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த பா.ஜ., திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, செப்டம்பர் 17 முதல் இரு வாரங்களுக்கு நாடு தழுவிய சேவை நிகழ்ச்சிகளையும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2001ம் ஆண்டு அக்டோபர் 7ல் குஜராத் முதல்வராக பொறுப்பேற்ற மோடி, 2014ம் ஆண்டு வரை அந்தப் பதவியில் தொடர்ந்தார். பின்னர் 2014 மே 26ல் பிரதமராக பதவியேற்றார். இதன் மூலம் வரும் அக்டோபர் 7ம் தேதி, முதல்வர் மற்றும் பிரதமர் என ஆட்சித் தலைமைப் பொறுப்பில் 25 ஆண்டுகளை நிறைவு செய்கிறார்.
இந்திய அரசியலில் நீண்ட காலம் ஆட்சித் தலைமையில் இருந்தவர்களில் மோடியின் இந்த பயணம் முக்கியமானதாக பா.ஜ., கருதுகிறது. இதையொட்டி, அவரது 25 ஆண்டு ஆட்சிக் காலத்தில் குஜராத் மற்றும் இந்தியாவில் ஏற்பட்ட வளர்ச்சி, உள்கட்டமைப்பு மாற்றங்கள் மற்றும் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல கட்சி முடிவு செய்துள்ளது.
இதையும் படிங்க: மோடி அமைச்சரவையில் திமுகவுக்கு இடம்? வடமாநில ஊடக தகவலால் தமிழக அரசியலில் திடீர் திருப்பம்!
கடந்த 2014ல் உலக பொருளாதாரத்தில் இந்தியா 11வது இடத்தில் இருந்த நிலையில், தற்போது நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளதாக பா.ஜ., தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மருத்துவக் கல்லூரிகள் மற்றும் எம்.பி.பி.எஸ்., இடங்கள் அதிகரிப்பு, விமான நிலையங்களின் எண்ணிக்கை உயர்வு, வீடுகளுக்கு கழிப்பறை, சமையல் எரிவாயு, குடிநீர் மற்றும் மின் இணைப்பு போன்ற திட்டங்களையும் சாதனைகளாக முன்வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, தூய்மைப் பணிகள், ரத்த தான முகாம்கள், மருத்துவ முகாம்கள் உள்ளிட்ட சேவை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. மேலும், வீடு வீடாகச் சென்று மக்களை சந்திக்கும் தொடர்பு இயக்கத்துக்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான பணிகளை ஒருங்கிணைக்க பா.ஜ., தேசிய பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் அமைச்சர், அமைப்புப் பொதுச் செயலாளர் மற்றும் மூத்த தலைவர்கள் அடங்கிய ஒருங்கிணைப்புக் குழுவும் செயல்பட உள்ளது.
இதையும் படிங்க: இந்தியாவின் எதிர்காலத்தை AI மூலம் மாற்ற திட்டம்? செயலாளர்களுடன் மோடி நடத்திய உயர்மட்ட ஆலோசனை!