மத்திய அமைச்சர்களின் ‘ப்ரோக்ரஸ் ரிப்போர்ட்’ ரெடி! அதிரடிக்கு தயாராகும் மோடி! அமைச்சரவை மாற்றம் கன்பார்ம்?
அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு நடைபெற உள்ளதால், சில அமைச்சர்களின் செயல்பாட்டு மதிப்பீடு எதிர்கால முடிவுகளில் தாக்கம் ஏற்படுத்துமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் வரும் செப்டம்பர் 23, 24 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடைபெற உள்ள இரண்டு நாள் ‘சிந்தன் பைதக்’ கூட்டம், மத்திய அமைச்சர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்ற மோடி அரசின் பதவிக்காலம் முக்கிய கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அரசின் செயல்பாடுகள், நிர்வாகம் மற்றும் அடுத்தகட்ட திட்டங்கள் குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது.
அனைத்து மத்திய கேபினட் அமைச்சர்களும் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். அமைச்சர்கள் பல்வேறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, நிர்வாகம், தகவல் தொடர்பு, சுய முன்னேற்றம், அரசு திட்டங்களின் செயல்பாடு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சில அமைச்சர்கள் தங்கள் துறையில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் சீர்திருத்தங்கள் குறித்து விளக்கமளிக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அரசுத் திட்டங்களின் முன்னேற்றம், கொள்கைகளை செயல்படுத்தும் விதம், மக்களுக்கு அரசு சேவைகளை கொண்டு சேர்ப்பது, அமைச்சகங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு மற்றும் எதிர்காலத்துக்கான அரசின் முன்னுரிமைகள் ஆகியவையும் விவாதிக்கப்பட உள்ளன. இதனால், இந்த கூட்டம் வழக்கமான அமைச்சரவை கூட்டத்தைவிட விரிவான ஆய்வுக் கூட்டமாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: டெல்லி மெட்ரோவில் பிரதமர் மோடி பயணம் வைரல்! குழந்தைகளுடன் நடந்த சுவாரஸ்ய உரையாடல்!
இதற்கிடையே, மத்திய அமைச்சரவை மாற்றம் தொடர்பான ஊகங்களும் அரசியல் வட்டாரத்தில் மீண்டும் வேகமெடுத்துள்ளன. அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு நடைபெற உள்ளதால், சில அமைச்சர்களின் செயல்பாட்டு மதிப்பீடு எதிர்கால முடிவுகளில் தாக்கம் ஏற்படுத்துமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
கடந்த 2021ம் ஆண்டிலும் இதேபோன்ற ‘சிந்தன் சிவிர்’ நடைபெற்றது. அந்த கூட்டம் ஒரு பெரிய அமைச்சரவை மாற்றத்துக்குப் பின்னர் நடந்தது என்பதால், தற்போதைய கூட்டத்தையும் அமைச்சரவை மாற்றம் தொடர்பான ஊகங்களுடன் சிலர் ஒப்பிட்டு வருகின்றனர். ஆனால், செப்டம்பர் 23–24 கூட்டத்துக்குப் பிறகு அமைச்சரவை மாற்றம் நடைபெறும் என்று மத்திய அரசு இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
இதனால், தற்போது உறுதியாக இருப்பது ‘சிந்தன் சிவிர்’ கூட்டம் மட்டுமே. அதில் நடைபெறும் ஆலோசனைகள் மற்றும் அதன்பிறகு வெளியாகும் அதிகாரப்பூர்வ முடிவுகள்தான் அமைச்சரவை மாற்றம் குறித்த அடுத்த கட்டத்தை தெளிவுபடுத்தும்.
இதையும் படிங்க: பாக்., பிரதமரின் பித்தலாட்டம்? மோடி, புடின், ஜின்பிங் எங்கே? வைரலான புகைப்படத்தால் வெடித்த சர்ச்சை!