பிரதமர் மோடியின் சென்னை பயணத்தில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்! முழு விவரம்!
முதல்வர் விஜய்யுடன் ஒரே மெட்ரோ ரயிலில் பயணம் செய்வது, இரண்டு இடங்களில் ரோடு ஷோ நடத்துவது உள்ளிட்ட நிகழ்ச்சிகள் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளன.
சென்னை: தமிழகத்தில் த.வெ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வருவதாக வெளியான தகவலின்படி, அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதல்வர் விஜய்யுடன் ஒரே மெட்ரோ ரயிலில் பயணம் செய்வது, இரண்டு இடங்களில் ரோடு ஷோ நடத்துவது உள்ளிட்ட நிகழ்ச்சிகள் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளன.
மோடி – விஜய் மெட்ரோ பயணம்!
டெல்லியில் இருந்து விமானம் மூலம் காலை 11 மணிக்கு சென்னை விமான நிலையம் வரும் பிரதமர் மோடி, அங்கிருந்து போரூர் மெட்ரோ ரயில் நிலையத்துக்குச் செல்கிறார். அங்கு முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர்கள் அவரை வரவேற்கின்றனர்.
இதையும் படிங்க: டீப்ஃபேக் வீடியோவுக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும்! பிரதமர் மோடியின் முக்கிய அழைப்பு!
தொடர்ந்து, பூந்தமல்லி – வடபழனி இடையிலான மெட்ரோ வழித்தடத்தில் போரூரில் இருந்து பூந்தமல்லி வரை பிரதமர் மோடியும் முதல்வர் விஜய்யும் ரயிலில் பயணம் செய்கின்றனர். அப்போது மாணவர்கள், தொழிலாளர்களுடன் பிரதமர் கலந்துரையாட உள்ளதாகக் கூறப்படுகிறது.
ரூ.13,000 கோடி திட்டங்கள்!
பின்னர் பகல் 12.15 மணியளவில் சென்னை ஐ.ஐ.டி. வளாகத்துக்குச் செல்லும் பிரதமர், அங்குள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலில் வழிபாடு நடத்துகிறார். தொடர்ந்து மூளை ஆராய்ச்சி மையத்தைப் பார்வையிடுகிறார். ஐ.ஐ.டி.யில் நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழகத்தில் சுமார் ரூ.13,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து, சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த பணிகளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இசையமைப்பாளர் இளையராஜாவின் இசைப் பயிற்சி மையத்தையும் திறந்து வைக்கிறார்.
மெட்ரோ, நெடுஞ்சாலை, ரயில்வே திட்டங்கள்!
பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ வழித்தடம், விருதுநகர் மாவட்டத்தில் வடுகப்பட்டி – தெற்கு வெங்கானூர் இடையிலான 36 கி.மீ. நான்கு வழிச்சாலை, மதுரை சுற்றுச்சாலையின் 30 கி.மீ. நான்கு வழிச்சாலைப் பகுதி ஆகியவை திறந்து வைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்ட அம்பாசமுத்திரம், பழனி, நாமக்கல், பரமக்குடி, வேலூர் கண்டோன்மெண்ட் ரயில் நிலையங்கள், காரைக்கால் – பேரளம் புதிய ரயில் பாதை, கோவையில் ரயில்வே மேம்பாலங்கள் உள்ளிட்ட திட்டங்களும் நிகழ்ச்சியில் இடம்பெறுகின்றன. சென்னை மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களிலும் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் தொடர்பான அறிவிப்புகள் இடம்பெற உள்ளன.
2 இடங்களில் ரோடு ஷோ!
சென்னை விமான நிலையம் முதல் போரூர், ஐ.ஐ.டி. மற்றும் நந்தம்பாக்கம் வரையிலான வழித்தடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பாஜக சார்பில் இரண்டு இடங்களில் ரோடு ஷோ நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மாலை 3 மணியளவில் நந்தம்பாக்கத்தில் நடைபெறும் ஜெய்கோபால் கரோடியா இந்து வித்யாலயா பள்ளியின் பொன்விழாவில் பங்கேற்று உரையாற்றிய பின்னர், பிரதமர் டெல்லிக்குப் புறப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இந்தியாவின் பெருமை!விமானப்படை வீரர்களை கவுரவித்த பிரதமர் மோடி!! ஜனாதிபதி முர்முவும் வாழ்த்து!