தி.குன்றம் தீபத்தை எதிர்ப்பவர்களுக்கு அரசியலில் இடமில்லை!! பாஜ புதிய தேசிய தலைவர் வார்னிங்!
''ராமர் பாலத்தின் இருப்பை மறுப்பவர்களுக்கும், கார்த்திகை தீபத் திருவிழாவை எதிர்ப்பவர்களுக்கும் அரசியலில் இடம் இல்லை என்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்'' என பாஜவின் புதிய தேசியத் தலைவராக பொறுப்பு ஏற்றுக் கொண்ட நிதின் நபின் கூறினார்.
டெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் புதிய தேசியத் தலைவராக இன்று (ஜனவரி 20, 2026) பொறுப்பேற்ற நிதின் நபின், தனது முதல் உரையில் தமிழக அரசியலை நேரடியாக குறிப்பிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, முன்னாள் தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா உள்ளிட்டோர் முன்னிலையில் நடந்த பதவியேற்பு விழாவில் அவர் ஆற்றிய உரை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நிதின் நபின் பேசியதாவது: “உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. சாதாரண மனிதனான எனக்கு இந்த உயரிய பதவி கிடைத்ததற்கு நீங்கள் வழி வகுத்தீர்கள். பிரதமர் மோடிக்கு மிகப்பெரிய நன்றி. அவரது சேவையை தொண்டனாக இருந்து பார்த்தேன். குஜராத் ஆனந்த் நிகழ்ச்சியில் அவருடன் இருந்தபோது, மக்களின் உணர்வுகளுடன் இணைந்தால் தான் ஒருவர் மகத்தானவராகிறார் என்பதை புரிந்துகொண்டேன்.
இதையும் படிங்க: இவர் தான் எனது பாஸ்!! மோடி அறிமுகப்படுத்திய நபர்!! தலைவர்கள் மாறலாம்! கொள்கை மாறாது என சூசகம்!
இன்று நான் பதவி மட்டும் ஏற்கவில்லை – கட்சியின் சித்தாந்தம், மரபுகள், பொறுப்புகளை ஏற்றுக்கொள்கிறேன். 140 கோடி இந்தியர்களும் வளர்ந்த இந்தியா கனவுடன் உழைத்து வருகிறார்கள். அதற்கு பிரதமர் தலைமை தந்து வருகிறார்.
தமிழகத்தில் திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றுவதை எதிர்க்கட்சிகள் தடுத்த சம்பவம் நினைவுக்கு வருகிறது. ராமர் பாலத்தின் இருப்பை மறுப்பவர்களுக்கும், கார்த்திகை தீபத் திருவிழாவை எதிர்ப்பவர்களுக்கும் அரசியலில் இடம் இல்லை என்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்.
நீதிபதியை பதவி நீக்கம் செய்ய முயற்சித்தது, சோமநாதர் பெருமையை கொண்டாடுவதற்கு தர்மசங்கடம் ஏற்படுத்தியது போன்ற செயல்கள் தொடர்கின்றன. இத்தகைய மரபுகளை தடுக்கும் சக்திகளை எதிர்கொள்ள வேண்டும்.
அடுத்த சில மாதங்களில் தமிழகம், அசாம், மேற்கு வங்கம், கேரளா, புதுச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. மக்கள்தொகை அமைப்பு மாற்றம் சவாலாக உள்ளது. ஆனால் பாஜக தொண்டர்கள் கடினமாக உழைத்து இந்த ஐந்து மாநிலங்களிலும் வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.”
நிதின் நபினின் இந்த பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கார்த்திகை தீபம், ராமர் பாலம் குறிப்பிட்டு எதிர்க்கட்சிகளை நேரடியாக சாடியது குறிப்பிடத்தக்கது. பாஜகவின் தேர்தல் தயாரிப்புகள் இனி எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
இதையும் படிங்க: பாஜ தேசிய தலைவராக நிதின் நபின் பொறுப்பேற்பு! பிரதமர் மோடி, ஜெ.பி. நட்டா உள்ளிட்டோர் வாழ்த்து!!