×
 

2029-ல் ஒரே நாடு; ஒரே தேர்தல்? 99% பேர் ஆதரவு! தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அதிர்ச்சி?

2029-ல் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டால் சுமார் இரண்டு ஆண்டுகள் முன்கூட்டியே தேர்தலை சந்திக்க வேண்டியிருக்கும்.

‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ திட்டத்தை 2029-ம் ஆண்டிலேயே அமல்படுத்துவதற்கான வாய்ப்பு இருப்பதாக, இத்திட்டத்தை ஆய்வு செய்து வரும் நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் தலைவர் பி.பி.சவுத்ரி தெரிவித்துள்ளார். பல்வேறு தரப்பினரிடம் நடத்தப்பட்ட ஆலோசனைகளில் 99 சதவீதம் பேர் திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறியிருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் நடைமுறை இந்தியாவில் ஏற்கனவே இருந்தது. 1952 மற்றும் 1967-ம் ஆண்டுகளில் மக்களவைத் தேர்தலுடன் மாநில சட்டசபைத் தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடைபெற்றன. பின்னர் பல மாநிலங்களில் ஆட்சி கலைப்பு உள்ளிட்ட காரணங்களால் தேர்தல் சுழற்சி மாறியது.

இதனை மீண்டும் கொண்டுவருவது தொடர்பாக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது. பல்வேறு தரப்பினரிடம் கருத்து கேட்ட அந்தக் குழு தனது அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. இதைத் தொடர்ந்து, அரசியலமைப்பின் 129-வது திருத்த மசோதா கடந்த 2024 டிசம்பரில் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் அது நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது.

இதையும் படிங்க: முதல்வர் விஜய், ஆதவ் அர்ஜுனாவுக்கு ஐகோர்ட் கெடு! ஆகஸ்ட் 27க்குள் மனு தாக்கல் செய்யாவிட்டால் ரூ.50 ஆயிரம் அபராதம்!

பாஜக எம்.பி. பி.பி.சவுத்ரி தலைமையிலான குழு சட்ட நிபுணர்கள், மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் ஆலோசனை நடத்தியுள்ளது. சமீபத்திய கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் ப.சிதம்பரம், பிரியங்கா காந்தி உள்ளிட்டோரும், திரிணமுல் காங்கிரஸ் எம்.பி. சாகரிகா கோஷும் பங்கேற்றனர்.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது கூட்டாட்சி அமைப்பையும் மாநில அரசுகளின் அதிகாரத்தையும் பாதிக்கும் என எதிர்ப்பு தெரிவித்தனர். சட்டசபைகளின் பதவிக்காலத்தை மாற்றுவது அரசியலமைப்புச் சிக்கலை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் வாதிட்டனர்.

இந்நிலையில், 99 சதவீதம் பேர் திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக பி.பி.சவுத்ரி கூறியுள்ளார். மீதமுள்ளவர்களும் அரசியல் ரீதியாக ஒப்புதல் தெரிவித்தால், 2029-ல் திட்டத்தை அமல்படுத்த முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், 2029-ல் திட்டம் நடைமுறைக்கு வந்தால், சில மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் குறைக்கப்பட வேண்டிய நிலை ஏற்படும். குறிப்பாக 2026-ல் தேர்தல் நடந்த தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அசாம் மற்றும் புதுச்சேரி சட்டசபைகளின் பதவிக்காலம் 2031 வரை உள்ள நிலையில், 2029-ல் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டால் சுமார் இரண்டு ஆண்டுகள் முன்கூட்டியே தேர்தலை சந்திக்க வேண்டியிருக்கும்.

அடிக்கடி தேர்தல் நடத்துவதால் ஏற்படும் நிர்வாகச் செலவு, தேர்தல் பணிகளில் அரசு ஊழியர்கள் ஈடுபடுவது, தேர்தல் நடத்தை விதிகளால் வளர்ச்சிப் பணிகளில் ஏற்படும் இடையூறு ஆகியவற்றை குறைக்கவே ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ திட்டம் முன்வைக்கப்படுவதாக மத்திய அரசு தரப்பு வாதிடுகிறது. அதேநேரம், மாநில அரசுகளின் பதவிக்காலத்தை குறைப்பது மற்றும் கூட்டாட்சி உரிமைகள் தொடர்பான எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பே திட்டத்துக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது.

இதையும் படிங்க: மு.க.ஸ்டாலினுக்கு நோ சொன்னது ஐகோர்ட்! கொளத்தூர் தேர்தல் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share