ஒத்தையில நிக்கிறாரு ஓபிஎஸ்!! அடுத்த விக்கெட்டும் அவுட்!! டிடிவி தினகரன் பக்கத்துல யாரு தெரியுதா?
பெரும்பாலான முக்கிய நிர்வாகிகள் வெளியேறிவிட்ட நிலையில், தற்போதுள்ள சிட்டிங் எம்எல்ஏ அய்யப்பன் டிடிவி தினகரனை சந்தித்து பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 நெருங்கி வரும் நிலையில், அரசியல் களம் முழுமையாக சூடுபிடித்துள்ளது. கூட்டணிகள் கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டு வருகின்றன. வரும் நாட்களில் முழு கூட்டணி அமைப்பு தெளிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விசிக், சிபிஎம், சிபிஐ, மநீமா உள்ளிட்ட பல கட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதிமுக-பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் பாமக (அன்புமணி அணி), அமமுக, தமாக, புதிய நீதிக்கட்சி உள்ளிட்டவை இணைந்துள்ளன.
நாம் தமிழர் கட்சி மற்றும் தவெக தனித்து களமிறங்கியுள்ள நிலையில், இம்முறை 4 முனை போட்டி உறுதியாகியுள்ளது. பிரசாரம், தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள் என களம் இப்போதே பரபரப்பாகி வருகிறது.
இதையும் படிங்க: தவெகவில் ஏன் இணையவில்லை! டிடிவி ஒபன் டாக்! செங்கோட்டையன் பேச்சை மறுக்க முடியல!!
இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிய பிறகு அடுத்த முடிவை எடுக்காமல் இருப்பது அவரது ஆதரவாளர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலான முக்கிய நிர்வாகிகள் அவரிடமிருந்து வெளியேறிவிட்டனர். வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் திமுகவிலும், எம்பி தர்மர் அதிமுகவிலும், கு.ப.கிருஷ்ணன் தவெகவிலும் இணைந்துள்ளனர்.
இதனால் விரைவில் முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் ஓபிஎஸ் இருக்கிறார். திமுக, பாஜக, தவெக ஆகிய மூன்று தரப்பும் அவரை தங்கள் பக்கம் இழுக்க தீவிர முயற்சி செய்து வருகின்றன. இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் அதிமுக-பாஜக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையே மற்றொரு பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. ஓ.பன்னீர்செல்வத்தின் முக்கிய ஆதரவாளரும், தற்போதைய சிட்டிங் எம்எல்ஏவுமான அய்யப்பன் மதுரையில் உள்ள தனியார் ஹோட்டலில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், "அய்யப்பன் என் நீண்ட கால நண்பர். இது அரசியல் ரீதியான சந்திப்பு இல்லை. அவர் என்னை மீண்டும் சந்திப்பதாக கூறியுள்ளார். பன்னீர்செல்வம் திமுகவுக்கு செல்ல வாய்ப்பில்லை" என்று தெரிவித்தார்.
தேமுதிக, ராமதாஸ் பாமக, புதிய தமிழகம் கட்சி உள்ளிட்டவை இன்னும் தங்கள் நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. அவர்களுடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் தங்களுடன் யாரும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று தேமுதிக மற்றும் புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளனர்.
கடந்த முறை அதிமுக-பாஜக கூட்டணியில் இருந்ததால் இம்முறையும் அந்த கூட்டணியில் இணைவதற்கே அதிக வாய்ப்பு உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. தேர்தல் அறிவிப்புக்கு குறுகிய காலமே உள்ள நிலையில், ஓபிஎஸ்ஸின் அடுத்த கட்ட முடிவு தமிழக அரசியலில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதையும் படிங்க: ஓபிஎஸ் நன்றிக்கடன் செலுத்தும் நேரம் வந்துவிட்டது?! தேஜ கூட்டணியில் இணைய டிடிவி அழைப்பு! தேர்தல் சடுகுடு!