ஓபிஎஸ் நன்றிக்கடன் செலுத்தும் நேரம் வந்துவிட்டது?! தேஜ கூட்டணியில் இணைய டிடிவி அழைப்பு! தேர்தல் சடுகுடு!
அதிமுகவால் 3 முறை முதல்வரான ஓபிஎஸ் தன்னை வாழ வைத்த கட்சிக்கு நன்றிக்கடன் செலுத்த வேண்டிய நேரம் வந்து விட்டது என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது. அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணி வலுப்பெற்று வரும் போது, ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) தனித்து நிற்கும் நிலை அரசியல் வட்டாரங்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
ஜெயலலிதாவின் விசுவாசியாகவும், அவரால் மூன்று முறை முதலமைச்சராக்கப்பட்டவராகவும் பார்க்கப்பட்ட ஓபிஎஸ், அம்மாவின் மறைவுக்குப் பிறகு பல ஏற்ற இறக்கங்களை சந்தித்தார். தர்மயுத்தம் நடத்தி எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்தார், பின்னர் 2021 தேர்தல் தோல்விக்குப் பிறகு தனித்து களமிறங்கினார். சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை அதிமுகவில் இணைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். ஆனால் இப்போது அவரது ஆதரவாளர்களும் பிரிந்து சென்று விட்டனர்.
வைத்திலிங்கம் திமுகவில் இணைந்தார், மனோஜ் பாண்டியன் திமுகவில், ஜேசிடி பிரபாகர் தவெகவில், தர்மர் எம்பி அதிமுகவில் இணைந்து விட்டனர். இதனால் ஓபிஎஸ் தனிமைப்படுத்தப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஆட்சியில், அதிகாரத்தில் பங்கு!! அமமுகவில் அமைச்சர்கள்?! ஆட்டத்தை ஆரம்பித்த டிடிவி தினகரன்!
இந்நிலையில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தேனி அருகே ஊஞ்சாம்பட்டியில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். "அதிமுகவால் 3 முறை முதல்வரான ஓபிஎஸ் தன்னை வாழ வைத்த கட்சிக்கு நன்றிக்கடன் செலுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. கூட்டணியில் இணைவதற்கு ஓபிஎஸ் தான் நல்ல முடிவு எடுக்க வேண்டும். சரியான முடிவு எடுத்து எங்களுடன் வருவார் என்ற நம்பிக்கை உள்ளது" என்று அழைப்பு விடுத்தார்.
மேலும், "அம்மாவின் ஆட்சி மலர்வதற்காக நாங்கள் ஒன்றிணைந்து பிரச்சாரம் செய்வோம். ஜெயலலிதாவின் உண்மைத் தொண்டரான ஓபிஎஸ் எங்கள் கூட்டணிக்கு வருவார். அவர் தர்மயுத்தத்தை தொடங்காமல் இருந்திருந்தால் சசிகலா தலைமையில் மீண்டும் முதல்வராக வந்திருப்பார்" என்றும் தெரிவித்தார்.
தற்போது அதிமுக - பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் பாமக, தமாக, ஜான்பாண்டியன், பூவை ஜெகன்மூர்த்தி உள்ளிட்டோர் இணைந்துள்ளனர். டிடிவி தினகரனின் அமமுகவும் இப்போது என்டிஏவில் இணைந்து விட்டது. தேமுதிகவை கொண்டு வர பேச்சுவார்த்தை நடக்கிறது.
ஆனால் ஓபிஎஸ்ஸை இன்னும் இணைக்கவில்லை. இதனால் ஓபிஎஸ் என்டிஏவில் இணைவாரா? அல்லது செங்கோட்டையன் அழைப்பை ஏற்று தவெகவுடன் கூட்டணி அமைப்பாரா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. தினகரன் எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் பேசி ஓபிஎஸ்ஸுக்கு சீட் வாங்கித் தருவாரா? அப்படி வாங்கினால் ஓபிஎஸ் எந்த சின்னத்தில் போட்டியிடுவார்? என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
தேர்தலுக்கு குறுகிய காலமே உள்ளதால் ஓபிஎஸ் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. தமிழக அரசியலில் அடுத்த சில நாட்களில் பெரிய ட்விஸ்ட் வருமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்!
இதையும் படிங்க: எம்.பி சீட்டுக்கு அடம்பிடிக்கும் டிடிவி! அமித்ஷா கொடுக்கும் ஆஃபர்! அமமுகவுக்கு இவ்வளவு தான்! முடிந்தது தொகுதி பங்கீடு!