அரைச்ச மாவையே அரைக்கும் இபிஎஸ்! சொதப்பும் ஆலோசனை கம்பெனி?! அதிமுக எதிர்கொள்ளும் திடீர் சிக்கல்! தொண்டர்கள் சோர்வு!
பழனிசாமியோ, இன்னமும் கொரோனா காலத்தையும், அவர் ஆட்சியில் நடந்த சம்பவங்களையுமே பேசி சோர்வடைய வைக்கிறார். இப்படி அரைத்த மாவையே அரைப்பதால், தொகுதிக்குள் பழனிசாமி வந்துபோன சுவடே இருப்பதில்லை.
தமிழக சட்டமன்ற தேர்தல் 2026 நெருங்கி வரும் நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி ‘மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் தொகுதி வாரியாக பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இதை தனது முக்கிய அரசியல் ஆயுதமாகவே அவர் கருதுகிறார். அதனால்தான் ஒவ்வொரு தொகுதிக்கும் குறைந்தது 10,000 பேரை கூட்டி வருமாறு மாவட்ட செயலர்களுக்கு கடும் உத்தரவு போட்டுள்ளார்.
இதுவரை 234 தொகுதிகளில் 186-இல் பழனிசாமி பிரசாரம் செய்து முடித்துள்ளார். தொடக்கத்தில் தொழிலதிபர்கள், விவசாயிகள், சங்க நிர்வாகிகளை சந்தித்து கருத்து கேட்டு, அதை பிரசாரத்தில் பயன்படுத்தினார். இதனால் அவரது பேச்சுக்கு ஓரளவு தாக்கம் இருந்தது.
இதையும் படிங்க: சென்னையில் சுற்றுப்பயணம் வேண்டாம்! எதுக்குங்க வெட்டி செலவு? இபிஎஸ்-க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நிர்வாகிகள்!
ஆனால் தற்போது அந்த அணுகுமுறை மாறிவிட்டது. பவானிசாகர், ஆவடி, அம்பத்தூர், மாதவரம், பொன்னேரி, ஈரோடு உள்ளிட்ட பல தொகுதிகளில் அச்சு பிசகாமல் ஒரே மாதிரியான பேச்சுதான்! தொகுதி மக்களின் கோரிக்கைகளை மாவட்ட செயலர்கள் தயார் செய்து கொடுத்தாலும், பழனிசாமியின் ஆலோசகர்கள் அதை கண்டுகொள்வதில்லை.
சமீபத்தில் ஈரோட்டில் அமைச்சர் முத்துசாமி பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. உறவினர் என்பதால் தவிர்த்ததாக கட்சியினர் கூறுகின்றனர். அதேபோல் மாதவரம், அம்பத்தூரில் அமைச்சர்கள் நாசர், சேகர்பாபு பற்றியும் பேசவில்லை. திருவள்ளூர் மாவட்டத்தில் மணல் கொள்ளை பெரும் பிரச்னையாக இருந்தும் அதை தொடவே இல்லை.
ஏற்கனவே பல முன்னாள் அமைச்சர்கள் உட்பட அதிமுக நிர்வாகிகள் தி.மு.க. அமைச்சர்களை விமர்சிப்பதை தவிர்த்து வருகின்றனர். இப்போது பழனிசாமியும் அதே பாதையில் செல்வது கட்சியினரிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், பத்து நாட்களுக்கு முன் நடந்த சம்பவங்களை கூட மக்கள் மறந்துவிடுவார்கள். ஆனால் பழனிசாமி இன்னும் கொரோனா காலம், தன் ஆட்சி கால சாதனைகள் என்று அரைத்த மாவையே அரைத்து வருகிறார். இதனால் தொகுதிக்குள் அவர் வந்துபோன சுவடே இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இன்னும் 48 தொகுதிகளில் பிரசாரம் மீதமுள்ளது. தேர்தல் நெருங்கும் நிலையில் பிரசாரம் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டுமெனில், பேச்சு பாணியை மாற்ற வேண்டும், உள்ளூர் பிரச்னைகளை தீவிரமாக எடுத்துரைக்க வேண்டும் என்று அதிமுக விசுவாசிகளே வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பழனிசாமியின் இந்த பிரசார பயணம் எப்படி மாறும்? அடுத்த சில வாரங்களில் தெரியவரும்.
இதையும் படிங்க: ஜெயலலிதா பிறந்தநாளில் இருக்கு சர்ப்ரைஸ்! எடப்பாடி பழனிசாமி போட்டு வைத்த ஸ்கெட்ச்! அதிமுக ப்ளான்!