×
 

வைகோ கைதா?... சி.எம். விஜய் மீது எஃப்.ஐ. ஆரா? - திமுகவில் இருந்து வந்த கலகக்குரல்...!

முன்னாள் விசிக எம்.எல்.ஏ.வும் தற்போது திமுகவில் இணைந்தவருமான பனையூர் பாபு வைகோ மற்றும் தவெகவை நோக்கி சரமாரி கேள்விகளை முன்வைத்துள்ளார். 

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இருந்து மதிமுக அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ள நிலையில், அக்கட்சியின் எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா விவகாரம் தமிழக அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய வைகோ, “திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்ற நமது இரண்டு எம்.எல்.ஏ-க்களும் (ஆர். செந்தில்செல்வன், டி.எம். ராஜேந்திரன்) தங்களின் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெக ஆதரவோடு தனித்து நின்று மீண்டும் வெல்ல வேண்டும்; அதற்கு தவெக தலைவரும் முதலமைச்சருமான விஜய் முழு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளார்” எனக் கூறியிருந்தார். இந்த விவகாரம் ‘குதிரை பேரம்’ மற்றும் ‘அரசியல் சட்ட விதிகளை மீறிய செயல்’ என திமுக மற்றும் எதிர்க்கட்சிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட சூழலில், வைகோ தற்பொழுது இதில் புதிய விளக்கமளித்து அரசியல் பல்டி அடித்துள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ, “மதிமுக எம்.எல்.ஏ-க்களைப் பதவி விலகச் சொல்லி முதலமைச்சர் விஜய் எந்த இடத்திலும் வற்புறுத்தவில்லை; அந்தத் தார்மீக முடிவை நான்தான் எடுத்தேன்” என்று திடீரென மாற்றிப் பேசியிருந்தார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பனையூர் பாபு. முன்னாள் விசிக எம்.எல்.ஏ.வும் தற்போது திமுகவில் இணைந்தவருமான பனையூர் பாபு வைகோ மற்றும் தவெகவை நோக்கி சரமாரி கேள்விகளை முன்வைத்துள்ளார். 

இதுகுறித்த அவரது சோசியல் மீடியா பதிவில், வைகோ கைது செய்யப்படுவாரா ? 
முதல்வர் விஜய் மீது FIR பதிவு செய்யப்படுமா ?. ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜாவை ஆட்சிக்கு எதிராக செயல்பட வைக்க பேரம்பேசியதாகக் கூறி ஒருசிலரை கைதுசெய்ததோடு முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மீதும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தியிருக்கிறது தமிழ்நாடு அரசு. ஊத்தங்கரை எம்.எல்.ஏ ராஜினாமாவும் செய்யவில்லை, தவெக ஆட்சிக்கு எதிராகவும் திரும்பவில்லை. ஆனாலும் திராவிட முன்னேற்றக் கழகம் மீது அவதூறு பரப்பும் ஒரே நோக்கில் செயல்படுகிறது தவெக.

இதையும் படிங்க: 7 தொகுதிகளின் இடைத்தேர்தல்... கூட்டணிக்கு என்ன பெயர்..? CM விஜய் தலைமையில் தொடங்கிய தோழமைக் கட்சிகள் கூட்டம்..!!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் எம்.எல்.ஏ-வான மன்னார்குடி எஸ்.காம்ராஜ் தற்போது தவெக கட்டுப்பாட்டில் இருக்கிறார். அதிமுக எம்எல்ஏக்கள் 6 பேரிடம் டீல் பேசி பதவியை ராஜினாமா செய்ய வைத்திருக்கிறார்கள் தவெகவினர். இதுபோக, திமுக சின்னத்தில் போட்டியிட்டு வென்ற மதிமுகவினர் எம்எல்ஏக்கள் இருவரை 'ராஜினாமா செய்யச் சொல்லுங்கள்' என தமிழ்நாடு முதல்வர் விஜய் பேசியதாக வைகோ பட்டவர்த்தனமாக பேசியிருக்கிறார். அதேநேரம், 'எங்கள் எம்எல்ஏக்களை நானே ராஜினாமா செய்யச் சொன்னேன்' என்றும் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார் வைகோ.

திமுக முக்கிய பிரமுகர்கள்மீது அவதூறு பரப்பு துடிக்கும் காவல்துறை மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை எப்போது கைது செய்யும்... ராஜினாமா செய்யச் சொன்ன முதல்வர் விஜய் மீது எப்போது எஃ.ஐ.ஆர் பதிவு செய்யப் போகிறது? தமிழ்நாடு அரசு என கேள்வி எழுப்பியுள்ளார். 

இதையும் படிங்க: ஆட்சியை கவிழ்க்க கோடிகள்..! கைதாகிய 3 பேருக்கு 15 நாள் ரிமாண்ட்... கோர்ட் அதிரடி உத்தரவு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share