இதுதான் மக்களுக்கு மோடி கொடுத்த கிஃப்ட்! பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு வலுக்கும் கண்டனம்!
மேற்காசியாவில் நிலவும் போர் சூழலால் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று உயர்ந்துள்ளது.
மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதட்டங்கள் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ள நிலையில், நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று உயர்த்தப்பட்டுள்ளது. நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக விலை உயர்வு இல்லாத நிலையில், திடீரென ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.3.14 காசும், டீசலுக்கு ரூ.3.11 காசும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியும் அதிருப்தியும் ஏற்பட்டுள்ளது.
உலகளாவிய அளவில் எரிபொருள் விலை உயர்வால் எரிபொருள் சில்லறை விற்பனையாளர்களுக்கு ஏற்படும் இழப்புகளை ஈடுகட்டும் வகையில் இந்த விலை உயர்வு முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வரும் மக்களுக்கு இந்த விலை உயர்வு பெரும் சுமையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. போக்குவரத்து செலவு அதிகரிப்பதால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரும் அபாயம் உள்ளது.
இந்நிலையில், கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் பெட்ரோல்-டீசல் விலை உயர்வைக் கடுமையாக விமர்சித்துள்ளார். “பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்பது பிரதமர் மோடியின் ‘பரிசு’” என்று விளாசிய அவர், நாடு மோசமான சூழ்நிலைக்கு சென்றுவிட்டதாகக் குற்றம் சாட்டினார். மேலும், பிரதமர் மோடி ஒரு ஆண்டு காலம் தங்கம் வாங்க வேண்டாம் என்று அறிவித்ததையும் அவர் கடுமையாக சாடினார்.
இதையும் படிங்க: பெட்ரோல், டீசல் விலை உயரும்! கையை பிசையும் இந்தியா! ஆட்டத்தை ஆரம்பித்த அமெரிக்கா!
துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார், மத்திய அரசின் கொள்கைகள் மக்களுக்கு எதிரானவை என்று தொடர்ந்து விமர்சித்து வருகிறார். எரிபொருள் விலை உயர்வு காரணமாக ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று அவர் எச்சரித்துள்ளார். இந்த விலை உயர்வு விவசாயிகள், போக்குவரத்து தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள் உள்ளிட்ட பல தரப்பினரையும் நேரடியாகப் பாதிக்கும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மத்திய அரசு எரிபொருள் வரியை குறைத்து மக்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மேற்கு ஆசியப் போர் சூழல் நீடித்தால் எரிபொருள் விலை மேலும் உயரும் அபாயம் உள்ளதால், மக்கள் மத்தியில் கவலை அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இந்த விலை உயர்வால் அன்றாடப் பொருட்களின் விலை உயர்வு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதால், பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலவுகிறது.
இதையும் படிங்க: தவெக அமைச்சர்கள் அலுவலகங்களில் பணிபுரிய ஆர்வம்!! ஆயிரக்கணக்கில் குவியும் மனு!