பிரதமர் மோடி ஒருவார பயணம்! ஜி 7 மாநாட்டில் பங்கேற்பு! 1993-க்கு பிறகு முதன்முறை நடக்கும் சம்பவம்!
இந்திய பிரதமர் மோடி மோடி ஒரு வாரம் பயணமாக பிரான்ஸ் மற்றும் ஸ்லோவாகியா நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்கிறார்.
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் முக்கியத்துவம் வாய்ந்த பயணமாக பிரதமர் நரேந்திர மோடியின் பிரான்ஸ் மற்றும் ஸ்லோவாகியா சுற்றுப்பயணம் பார்க்கப்படுகிறது. ஒரு வார கால அரசுமுறை பயணமாக நடைபெறவுள்ள இந்த விஜயத்தின் போது, இருதரப்பு உறவுகள், முதலீடு, தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் உலகளாவிய பிரச்னைகள் குறித்து முக்கிய ஆலோசனைகள் நடைபெற உள்ளன.
பிரதமர் மோடி ஜூன் 13ஆம் தேதி இந்தியாவில் இருந்து புறப்பட்டு பிரான்ஸ் நாட்டின் நீஸ் நகரை சென்றடைய உள்ளார். அங்கு ஜூன் 14ஆம் தேதி பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்த சந்திப்பில் இந்தியா-பிரான்ஸ் உறவுகளை மேலும் வலுப்படுத்துவது, பாதுகாப்பு ஒத்துழைப்பு, தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் உலகளாவிய சவால்களை இணைந்து எதிர்கொள்வது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
மேலும், இரு தலைவர்களும் இணைந்து “Bharat Innovates” என்ற சிறப்பு நிகழ்ச்சியை தொடங்கி வைக்க உள்ளனர். புதுமை, தொழில்நுட்பம் மற்றும் ஸ்டார்ட்அப் துறைகளில் இந்தியாவின் வளர்ச்சியை உலக அரங்கில் வெளிப்படுத்தும் முக்கிய நிகழ்வாக இது கருதப்படுகிறது.
இதையும் படிங்க: மேற்காசிய மோதல் மேலும் தீவிரமடையலாம்?! போர் எப்போ முடியும்?! பெட்ரோலியம் அமைச்சர் தகவல்!
இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி ஜூன் 14 முதல் 16ஆம் தேதி வரை ஸ்லோவாகியா நாட்டிற்கு பயணம் மேற்கொள்கிறார். 1993ஆம் ஆண்டு ஸ்லோவாகியா சுதந்திர நாடாக உருவான பிறகு, இந்திய பிரதமர் ஒருவர் அந்நாட்டிற்கு மேற்கொள்ளும் முதல் அதிகாரப்பூர்வ பயணம் இதுவாகும். எனவே இந்த விஜயம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
ஸ்லோவாகியாவில் அந்நாட்டு தலைவர்களுடன் சந்திப்பு நடத்தும் பிரதமர் மோடி, வர்த்தகம், முதலீடு, தொழில்துறை ஒத்துழைப்பு மற்றும் கல்வி தொடர்பான வாய்ப்புகள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார். இந்தியா மற்றும் மத்திய ஐரோப்பிய நாடுகளுக்கிடையேயான உறவுகளை வலுப்படுத்தும் முயற்சியாகவும் இந்த பயணம் கருதப்படுகிறது.
அதன்பின் ஜூன் 16 முதல் 19ஆம் தேதி வரை பிரதமர் மோடி மீண்டும் பிரான்ஸ் சென்று பாரீஸ் நகரில் நடைபெறும் ஜி-7 மாநாட்டில் பங்கேற்கிறார். உலக பொருளாதாரம், பாதுகாப்பு, காலநிலை மாற்றம் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு போன்ற முக்கிய பிரச்னைகள் குறித்து உலக தலைவர்கள் கலந்துரையாடும் இந்த மாநாட்டில் இந்தியாவின் நிலைப்பாடுகளையும் அவர் எடுத்துரைக்க உள்ளார்.
இந்த சுற்றுப்பயணம் இந்தியாவின் உலகளாவிய செல்வாக்கை மேலும் வலுப்படுத்தும் என அரசியல் மற்றும் வெளியுறவு நிபுணர்கள் கருதுகின்றனர்.
இதையும் படிங்க: பிரதமராக பதவியேற்று 12 ஆண்டுகள் முடிவு! ஒருநாள் கூட ஓய்வு இல்லை! நேருவின் சாதனையை முறியடித்தார் மோடி!