பயங்கரவாதத்தில் இரட்டை நிலைப்பாடு கூடாது! பாக்., பிரதமர் முன்பு அதிரடி காட்டிய மோடி! கவனத்தை ஈர்த்த உரை!
வர்த்தகத்தை எளிதாக்கவும், பொருளாதார வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கவும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு இந்தியா ஆதரவு அளிக்கும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
பிஷ்கெக்: பயங்கரவாதத்தை எதிர்கொள்ளும் விவகாரத்தில் இரட்டை நிலைப்பாட்டுக்கு இடமளிக்கக் கூடாது என்று பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் மோடி இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
மத்திய ஆசிய நாடுகளான உஸ்பெகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தானில் பிரதமர் மோடி அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். உஸ்பெகிஸ்தான் பயணத்தை முடித்துக்கொண்டு கிர்கிஸ்தான் சென்ற அவர், அந்நாட்டின் தலைநகர் பிஷ்கெக்கில் நடைபெற்ற 26-வது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்றார்.
மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வாயிலாக இந்தியா மேற்கொண்டு வரும் பல்வேறு முயற்சிகளை எடுத்துரைத்தார். குறிப்பாக ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள், இளம் எழுத்தாளர்கள் மற்றும் இளம் விஞ்ஞானிகளை இணைக்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: புதின், ஜின்பிங்கை சந்தித்த மோடி! சீன அதிபர் சொன்ன அந்த ஒரு வார்த்தை! கவனம் பெற்ற சந்திப்பு!
எஸ்சிஓ அமைப்பு தொடர்பான இந்தியாவின் தொலைநோக்கு அணுகுமுறையை பாதுகாப்பு, இணைந்து செயல்படுதல் மற்றும் புதிய வாய்ப்புகள் என மூன்று முக்கிய அம்சங்களாக பிரதமர் விளக்கினார்.
இதில் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைக்கு அவர் அதிக முக்கியத்துவம் அளித்தார். பயங்கரவாதத்தை எதிர்கொள்ளும்போது, அதன் முழு கட்டமைப்பையும் முடக்க வேண்டியது அவசியம் என அவர் கூறினார். பயங்கரவாத அமைப்புகளுக்கு கிடைக்கும் நிதி, ஆள்சேர்ப்பு மற்றும் பாதுகாப்பான புகலிடங்கள் ஆகியவற்றை தடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், பயங்கரவாதம் தொடர்பான விவகாரத்தில் உலக நாடுகள் இரட்டை நிலைப்பாட்டை கடைப்பிடிக்காமல் ஒரே குரலில் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று பிரதமர் கூறினார். பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் எந்தவித சமரசத்துக்கும் இடமில்லை என்ற வகையில் அவரது கருத்து அமைந்தது.
அதே நேரத்தில், போர்கள் மற்றும் ஆயுத மோதல்களுக்கு போர்க்களத்தில் நிரந்தர தீர்வு காண முடியாது என்றும் மோடி தெரிவித்தார். எந்தவொரு மோதலாக இருந்தாலும் பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர முயற்சிகள் மூலமாகவே தீர்வு காணப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
வர்த்தகத்தை எளிதாக்கவும், பொருளாதார வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கவும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு இந்தியா ஆதரவு அளிக்கும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
மேலும், அரசுகளுக்கு இடையேயான உறவுகளை மட்டுமின்றி, மக்களுக்கு இடையேயான தொடர்புகளையும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு வலுப்படுத்த வேண்டும் என மோடி கேட்டுக்கொண்டார்.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் முன்னிலையில் பயங்கரவாதம் தொடர்பாக பிரதமர் மோடி தெரிவித்த இந்த கருத்துகள் சர்வதேச அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளன.
இதையும் படிங்க: வெளிநாடு செல்லாதீங்க! தங்கமும் வாங்காதீங்க! பிரதமர் மோடி ரீல்ஸ் மூலம் அதிரடி வேண்டுகோள்!