×
 

மாநிலங்களுக்கு இடையேயான தண்ணீர் பிரச்னைகளை தீர்க்க வேண்டும்! பிரதமர் மோடி வலியுறுத்தல்!

மாநிலங்களுக்கு இடையேயான தண்ணீர் தகராறுகளைத் தீர்க்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.

மாநிலங்களுக்கு இடையேயான தண்ணீர் தகராறுகளை உடனடியாக தீர்க்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். மத்திய அரசின் ‘பிரகதி’ கூட்டத்தில் பேசிய அவர், உள்கட்டமைப்பு திட்டங்களில் ஏற்படும் தாமதம் நாட்டின் வளர்ச்சியை பாதிப்பதாகவும் எச்சரித்தார்.

மத்திய அரசு கடந்த 2015-ஆம் ஆண்டு தொடங்கிய ‘பிரகதி’ திட்டம், மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையேயான முக்கிய திட்டங்களை கண்காணித்து விரைவுபடுத்தும் ஒருங்கிணைந்த நிர்வாக தளமாக செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் நடைபெற்ற சமீபத்திய உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமை தாங்கினார்.

வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மத்திய அரசின் செயலாளர்கள், பல மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் ஒன்பது மாநிலங்களை உள்ளடக்கிய ரூ.30 ஆயிரம் கோடி மதிப்பிலான ஏழு முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. இதில் ரயில்வே, மின்சாரம் மற்றும் சாலைத் துறைகளுக்கான திட்டங்கள் இடம்பெற்றிருந்தன.

இதையும் படிங்க: வீடுகளை விட்டு வெளியே வருவதை தவிருங்கள்! அதிகரிக்கும் வெப்பம்! பிரதமர் மோடி வேண்டுகோள்!

கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, திட்டங்களை நிறைவேற்றுவதில் ஏற்படும் தாமதம் செலவினத்தை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கிடைப்பதையும் தாமதப்படுத்துகிறது என்று கூறினார். திட்டங்களை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்க அதிகாரிகள் முழு கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், மாநிலங்களுக்கு இடையே நீண்ட காலமாக நிலவி வரும் தண்ணீர் பிரச்னைகள் குறித்து பிரதமர் கவலை தெரிவித்தார். மாநிலங்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி தண்ணீர் தகராறுகளுக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். தொழில்நுட்ப அடிப்படையிலான கண்காணிப்பு மற்றும் அனுமதிகளை உரிய நேரத்தில் வழங்குவது திட்டங்கள் விரைவாக நிறைவேற உதவும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

இந்த கூட்டம் மூலம் மத்திய அரசு, வளர்ச்சி திட்டங்களை வேகப்படுத்துவதோடு மாநிலங்களுக்கிடையேயான ஒத்துழைப்பையும் வலுப்படுத்த முயற்சி மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: விஜயை முந்திய கேரள முதல்வர் சதீஷன்! பிரதமர் மோடியுடன் இன்றே சந்திப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share