×
 

இன்று சென்னை வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி!! மதுரை, புதுச்சேரியில் துவக்கி வைக்கும் திட்டங்கள் என்னென்ன?!

மதுரை அரசு நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு மாலை 4 மணி அளவில் திருப்பரங்குன்றம் சென்று முருகன் கோயிலில் பிரதமர் வழிபடுகிறார்.

புதுச்சேரி, தமிழ்நாடு, கேரளா, அஸ்ஸாம், மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களில் ஏப்ரல் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தீவிர பிரசாரப் பயணங்களை மேற்கொண்டு வருகிறார். மத்திய அரசின் நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சித் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் இந்தப் பயணங்கள் அமைந்துள்ளன.

ராஜஸ்தான், குஜராத் பயணங்களை முடித்துவிட்டு, பிரதமர் மோடி இன்று (பிப்ரவரி 28) இரவு 9 மணியளவில் சென்னை வந்தடைகிறார். கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் அவர் இரவு தங்குகிறார்.

நாளை (மார்ச் 1) காலை 11.45 மணியளவில் புதுச்சேரி செல்லும் பிரதமர், லாஸ்பேட்டை ஹெலிபேட் மைதானத்தில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார். இங்கு சுமார் ரூ.2,700 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டி, உரையாற்றுகிறார்.

இதையும் படிங்க: சப்தமில்லாமல் மோடி படைத்த அடுத்த சாதனை!! அதிபர் ட்ரம்ப்பே மோடிக்கு அப்புறம்தான்!! இன்ஸ்டாகிராமில் 10 கோடி பாலோவர்ஸ்!

மிக முக்கியமான திட்டமாக, நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட கரசூர்-சேதராப்பட்டு தொழிற்பேட்டை (750 ஏக்கர்) திறந்து வைக்கப்படுகிறது. இதில் மருந்து பூங்கா (Pharma Park), ஜவுளி பூங்கா (Textile Park), ஐடி பூங்கா (IT Park), சென்னை ஐஐடி ஆராய்ச்சி மையம், ஜிப்மர் மேம்பட்ட சுகாதார வசதிகள் ஆகியவை இடம்பெறுகின்றன. இது புதுச்சேரியில் தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகளை பெரிதும் உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதுச்சேரி நிகழ்ச்சி முடிந்ததும், பிரதமர் மதுரை நோக்கி பயணிக்கிறார். பிற்பகல் 3 மணியளவில் மதுரையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று, ரூ.4,400 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார். இதில் மரக்காணம்-புதுச்சேரி நான்கு வழிச் சாலை, பரமக்குடி-ராமநாதபுரம் நான்கு வழிச் சாலை போன்ற முக்கியத் திட்டங்கள் அடங்கும்.

அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட மொரப்பூர், பொம்மிடி, ஸ்ரீவில்லிபுத்தூர், சோழவந்தான், மணப்பாறை, பொள்ளாச்சி சந்திப்பு, காரைக்குடி சந்திப்பு, திருவாரூர் சந்திப்பு ரயில் நிலையங்களைத் திறந்து வைக்கிறார். மேலும், கும்பகோணம், ஏற்காடு, வேலூரில் புதிய பண்பலை வானொலி நிலையங்கள் தொடங்கப்படுகின்றன. சென்னை கடற்கரை - எழும்பூர் இடையேயான 4-வது ரயில்பாதையும் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.

மதுரை நிகழ்ச்சிகளை முடித்த பிறகு, மாலை 4 மணியளவில் திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பிரதமர் சாமி தரிசனம் செய்கிறார். அதன் பின்னர் மதுரையில் நடைபெறும் என்டிஏ பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றி, டெல்லி திரும்புகிறார்.

இந்தப் பயணம் தேர்தல் களத்தில் மத்திய அரசின் வளர்ச்சி திட்டங்களை வலியுறுத்தும் வகையில் அமைந்துள்ளது. மக்களுக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: டெல்லி ஏஐ உச்சி மாநாடு!! பிரதமர் மோடி துவக்கி வைப்பு!! இந்தியாவில் குவியும் உலகத்தலைவர்கள்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share