யாருடன் கூட்டணி? – தைலாபுரத்தில் டாக்டர் ராமதாஸ் இன்று இறுதி கட்ட ஆலோசனை!
தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் அவசர நிர்வாகக் குழுக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
ராமதாஸ் - அன்புமணி இடையே பிளவு; பாமகவில் தனித்தனி அணிகளாகப் பிரிந்து கூட்டணி பேச்சுவார்த்தை!
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள வேளையில், பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) ஏற்பட்டுள்ள பிளவு மற்றும் கூட்டணி விவகாரம் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் இன்று அக்கட்சியின் நிர்வாகக் குழு அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
கடந்த சில மாதங்களாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாகக் கட்சி இரண்டு அணிகளாகப் பிரிந்துள்ளது. அன்புமணி ராமதாஸ் தலைமையிலான அணி ஏற்கனவே அதிமுக-பாஜக கூட்டணியில் இணைய முடிவெடுத்து, எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
அன்புமணி ராமதாஸின் கூட்டணி முடிவுகள் சட்டவிரோதமானவை என்று அறிவித்துள்ள டாக்டர் ராமதாஸ், தான்தான் கட்சியின் உண்மையான தலைவர் என்றும், கூட்டணி குறித்து முடிவு எடுக்கும் அதிகாரம் தனக்கே உண்டு என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பாமக மோதல்.... தேர்தல் தேதியை தள்ளி வைக்க கோரி ராமதாஸ் வழக்கு நாளை விசாரணை!
யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து இறுதி முடிவெடுக்க இன்று தைலாபுரத்தில் ராமதாஸ் தலைமையில் 21 பேர் கொண்ட உயர்மட்டக் குழு கூடி விவாதித்து வருகிறது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் முக்கியப் பொறுப்பாளர்களான:
ஸ்ரீகாந்தி (பாமக செயல் தலைவர்), முரளி சங்கர் (பொதுச்செயலாளர்), சையத் மன்சூர் உசேன் (பொருளாளர்), ஜி.கே. மணி (கௌரவத் தலைவர்), அருள் (சேலம் சட்டமன்ற உறுப்பினர்)ஆகியோர் உட்பட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
அதிமுகவுடன் அன்புமணி கைகோர்த்துள்ள நிலையில், டாக்டர் ராமதாஸ் தலைமையிலான இந்த அணி யாருடன் கூட்டணி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இன்றைய கூட்டத்தின் முடிவில், ராமதாஸ் தனது அதிகாரப்பூர்வ கூட்டணி அறிவிப்பை வெளியிடுவார் எனத் தெரிகிறது.
பாமகவின் இந்த உட்கட்சிப் பூசல் மற்றும் தனித்தனி கூட்டணி முடிவுகள் வன்னியர் வாக்கு வங்கியில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது தேர்தல் களத்தில் மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது.
இதையும் படிங்க: "விஜய் பெரம்பூரில் போட்டியிட வேண்டும்!" - தவெக மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம்!