வடலூரில் பெரியார், அம்பேத்கர் சிலைகளை மீண்டும் நிறுவுக! தமிழக அரசுக்கு ராமதாஸ் வேண்டுகோள்!
வடலூரில் சாலை விரிவாக்கப் பணிகளுக்காக அப்புறப்படுத்தப்பட்ட தந்தை பெரியார் மற்றும் அண்ணல் அம்பேத்கர் ஆகியோரின் சிலைகளை மீண்டும் நிறுவ வேண்டும் எனப் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடலூர் மாவட்டம் வடலூர் பகுதியில் சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு, அப்பகுதி மக்களின் பேராதரவுடன் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட தந்தை பெரியார் மற்றும் அண்ணல் அம்பேத்கர் ஆகியோரின் சிலைகள், அண்மையில் நடைபெற்ற சாலை விரிவாக்கப் பணிகளுக்காக மாவட்ட நிர்வாகத்தால் அப்புறப்படுத்தப்பட்டன. "வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்" என்று முழங்கிய வள்ளலார் அவதரித்த வடலூர் மண்ணில், சமூக நீதி போற்றிய இந்தத் தலைவர்களின் சிலைகள் அகற்றப்பட்டுப் பல மாதங்கள் ஆகியும், இதுவரை அவை மீண்டும் நிறுவப்படவில்லை.
இது குறித்து மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "காலத்தின் தேவைக்கேற்ப சாலை விரிவாக்கப் பணிகள் அவசியம் என்பதை ஏற்றுக்கொண்டாலும், அப்புறப்படுத்தப்பட்ட தலைவர்களின் சிலைகளை மாற்று இடத்திலோ அல்லது அதே இடத்தின் அருகிலோ மீண்டும் நிறுவாமல் இருப்பது முறையல்ல. பெரியார் மற்றும் அம்பேத்கர் ஆகியோரின் கொள்கைகளைத் தாங்கிப் பிடிக்கும் இந்த அரசு, அவர்களின் சிலைகளைப் பல மாதங்களாகப் புறக்கணித்து வருவது ஒடுக்கப்பட்ட மற்றும் சமூக நீதியைக் கடைப்பிடிக்கும் மக்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், அந்தப் பகுதியில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள், சிலைகளை மீண்டும் நிறுவுவது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடமும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் பலமுறை முறையிட்டும், இதுவரை அதற்கான அனுமதியோ அல்லது பணிகளோ தொடங்கப்படவில்லை எனக் குற்றம் சாட்டியுள்ளார். எனவே, சமூக நீதியைத் தனது கொள்கையாகக் கொண்டுள்ள தமிழக அரசு, வருங்காலச் சந்ததியினர் இந்தத் தலைவர்களின் சிறப்புகளை அறியும் வகையில், வடலூரில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் அப்புறப்படுத்தப்பட்ட சிலைகளை உடனடியாக மீண்டும் நிறுவ வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: தந்தை பெரியார் நினைவை போற்றுவோம்... முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை...!
இதையும் படிங்க: தந்தை - மகன் மோதல் உச்சகட்ட பரபரப்பு..!! டிசம்பர் 29-ல் பாமகவின் கூட்டணி அறிவிப்பு!