“ராமதாஸ் நடத்தும் கூட்டத்திற்கு அனுமதி தராதீர்கள்!” - கூட்டத்திற்கு தடை கோரி அன்புமணி தரப்பு போலீசில் புகார்!
சேலத்தில் வரும் 29-ஆம் தேதி மருத்துவர் ராமதாஸ் தலைமையில் நடைபெறவுள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது என அன்புமணி ராமதாஸ் தரப்பினர் காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) உட்கட்சி விவகாரங்கள் தற்போது உச்சகட்ட மோதலை எட்டியுள்ளன. சேலம் ஐந்து ரோடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், வரும் 29-ஆம் தேதி பாமக-வின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்தக் கூட்டத்திற்குத் தடை கோரி அன்புமணி ராமதாஸ் தரப்பினர் இன்று மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளனர்.
அன்புமணி தரப்பு வழக்கறிஞர்கள் மற்றும் நிர்வாகிகள் அளித்த அந்தப் புகாரில், "உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளின்படி பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களே உறுதி செய்யப்பட்டுள்ளார். எனவே, கட்சியின் பொதுக்குழுவைக் கூட்டவும், அதற்குத் தலைமை தாங்கவும் தலைவரைத் தவிர வேறு யாருக்கும் சட்டப்படி அதிகாரம் இல்லை. இந்தக் கூட்டத்திற்குப் பாமக சார்பில் எந்தவித அனுமதியோ அல்லது பாதுகாப்போ காவல்துறையிடம் கோரப்படவில்லை" என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், கட்சியின் பெயரைத் தவறாகப் பயன்படுத்தி வேறு யாராவது அனுமதி கேட்டால் அது சட்டவிரோதமானது என்றும், அதற்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். பாட்டாளி மக்கள் கட்சியின் பெயர், கொடி மற்றும் அடையாளங்களை அனுமதியின்றிப் பயன்படுத்தும் நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆணையாளர் அலுவலகத்தில் முறையிடப்பட்டுள்ளதால் சேலம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. மருத்துவர் ராமதாஸ் - அன்புமணி ராமதாஸ் தரப்பிற்கு இடையே ஏற்பட்டுள்ள இந்த வெளிப்படையான மோதல் பாமக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: வடலூரில் பெரியார், அம்பேத்கர் சிலைகளை மீண்டும் நிறுவுக! தமிழக அரசுக்கு ராமதாஸ் வேண்டுகோள்!
இதையும் படிங்க: தந்தை - மகன் மோதல் உச்சகட்ட பரபரப்பு..!! டிசம்பர் 29-ல் பாமகவின் கூட்டணி அறிவிப்பு!