ராமதாஸ் தலைமையில் சேலம் பொதுக்குழு உறுதி! - அன்புமணி தரப்புக்கு ஜி.கே.மணி பதிலடி!
சேலத்தில் வரும் 29-ஆம் தேதி திட்டமிட்டபடி மருத்துவர் ராமதாஸ் தலைமையில் பாமக மாநிலச் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
மருத்துவர் ராமதாசைச் சிறுமைப்படுத்துவதை ஏற்க முடியாது என்றும், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் போல அன்புமணி தரப்பினர் காவல் ஆணையரிடம் புகார் அளிப்பதாகவும் அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவத் தலைவர் ஜி.கே.மணி, கட்சியின் உட்கட்சிப் பூசல் மற்றும் சேலம் பொதுக்குழு குறித்து ஆவேசமாகப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், "வரும் 29-ஆம் தேதி சேலம் ஐந்து ரோடு பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில நிர்வாகிகள் பங்கேற்கும் பிரம்மாண்ட பொதுக்குழு கூட்டம் நடைபெறும். 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், யாருடன் கூட்டணி என்பது குறித்த முக்கிய முடிவை மருத்துவர் ஐயா அவர்கள் இந்த மேடையில் அறிவிப்பார். ஒட்டுமொத்தத் தேசமே இந்த முடிவை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறது" எனத் தெரிவித்தார்.
அன்புமணி ராமதாஸ் தரப்பினர் சேலம் காவல் ஆணையரிடம் அளித்த புகார் குறித்துப் பேசிய ஜி.கே.மணி, "மருத்துவர் ராமதாஸ் பெயர் சொன்னாலே அது ஒரு தனிச் சக்தி. அத்தகைய தலைவரைப் பார்த்து அதிகாரம் இல்லை என்று கூறுவது நகைப்புக்குரியது. அன்புமணி ஏற்கனவே கட்சியில் இருந்து நீக்கப்பட்டு விட்டார். அவ்வாறு இருக்கையில், அவர் நீதிமன்றம் செல்வதும், விருப்ப மனு பெறுவதும் ஒரு போலியான நாடகம். 'அப்பாவுடன் சேர்ந்து செயல்படலாமே' என நீதிமன்றமே கேள்வி எழுப்பியும், அதனை ஏற்காமல் பிடிவாதம் பிடிப்பது ஏன்? மருத்துவர் அன்புமணி தலைவர் இல்லை என்று கூறித்தான் வழக்கு முடிக்கப்பட்டது. இப்போது அவர் நடத்தும் அனைத்தும் கூட்டணி பேரம் பேசுவதற்கான கபட நாடகங்களே" என்று சாடினார்.
இதையும் படிங்க: ராமதாஸ் போன்ற தலைவரை கொச்சைப்படுத்தலாமா? கொந்தளித்த ஜி.கே. மணி…!
தொடர்ந்து பேசிய அவர், "மருத்துவர் ஐயாவை கொச்சைப்படுத்துவதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இப்படிப் பேசுபவர்களுக்கு மனிதத்தன்மையே இல்லையா? நீங்கள் எவ்வளவுதான் திசைதிருப்ப முயன்றாலும் மக்கள் மத்தியில் அது எடுபடாது. ராமதாஸ் குறித்துத் தவறாகப் பேசப் பேச அவர் இன்னும் வேகமாகச் செயல்படுவார். வரும் தேர்தலில் மருத்துவர் ராமதாஸ் சேரும் கூட்டணிதான் வெற்றி பெறும் என்பது உறுதி. மேலும், கிறிஸ்தவத் தேவாலயங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை; வழிபாட்டுத் தலங்களைப் பாதுகாப்பது அனைவரின் கடமை" என்றும் ஜி.கே.மணி தனது பேட்டியில் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: “ராமதாஸ் நடத்தும் கூட்டத்திற்கு அனுமதி தராதீர்கள்!” - கூட்டத்திற்கு தடை கோரி அன்புமணி தரப்பு போலீசில் புகார்!