அரசியல் வாரிசை சுகந்தன்?! மகள் வழி பேரனுக்கு கட்சியில் பதவி கொடுத்த ராமதாஸ்!
ராமதாஸ் மகள் ஸ்ரீ காந்தியின் மூத்த மகன் டாக்டர் சுகந்தனுக்கு, பா.ம.க., மாநில செயற்குழு உறுப்பினர் பதவி வழங்கி, அரசியல் வாரிசாக ராமதாஸ் அறிமுகப்படுத்தியுள்ளார்.
புதிய இளம் முகமாக டாக்டர் சுகந்தனை அறிமுகப்படுத்தி, மகள் ஸ்ரீ காந்தியின் மூத்த மகனுக்கு பாமக மாநில செயற்குழு உறுப்பினர் பதவியை அளித்துள்ளார் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ். இது அன்புமணி ராமதாஸுடன் உள்ள குடும்ப-கட்சி மோதலை மேலும் தீவிரப்படுத்தும் என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டிசம்பர் 12 அன்று தமிழகம் முழுவதும் 10.5% வன்னியர் தனி இட ஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்தப்படும் என அறிவித்த ராமதாஸ், விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளராகவும் சுகந்தனை நியமித்துள்ளார்.
பாமகவில் ராமதாஸ் - அன்புமணி இடையேயான உச்சகட்ட மோதலுக்கு பிறகு, அன்புமணியை கட்சியில் இருந்து நீக்கிய ராமதாஸ், அவரது செயல் தலைவர் பதவியை மகள் ஸ்ரீ காந்திக்கு அளித்தார். மேலும், ஸ்ரீ காந்தியின் மூன்றாவது மகன் முகுந்தனுக்கு அன்புமணி வகித்த இளைஞர் சங்க தலைவர் பதவியை கொடுத்தார்.
இதற்கு அன்புமணி கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், கட்சிக்குள் பெரும் குழப்பம் ஏற்பட்டது. இதன் விளைவாக முகுந்தன் அந்தப் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர், அந்தப் பதவி ஜி.கே. மணியின் மகன் தமிழ்க்குமாரனுக்கு வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: பென்னாகரம் - சவுமியா Vs தர்மபுரி - ஸ்ரீகாந்தி!! பலம் காட்ட தயாராகும் ராமதாஸ் - அன்புமணி! களைகட்டும் குடும்ப அரசியல்!
இந்நிலையில், தனது மகள் ஸ்ரீ காந்தியின் மூத்த மகன் டாக்டர் சுகந்தனை கட்சியின் அரசியல் வாரிசாக அறிமுகப்படுத்தும் நோக்கத்தில், ராமதாஸ் மாநில செயற்குழு உறுப்பினர் பதவியை அளித்துள்ளார். திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் நேற்று (நவம்பர் 25) நடந்த பாமக மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில் இந்த முடிவு அறிவிக்கப்பட்டது. இதில் ஜி.கே. மணி, தமிழ்க்குமாரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்திற்குப் பின் பேட்டியளித்த ராமதாஸ், “வரும் 2026 சட்டசபைத் தேர்தலில் தமிழ்க்குமாரன் போட்டியிடுவார். அவர் மிகப்பெரிய வெற்றி பெறுவார். டிசம்பர் 30 அன்று நடக்கும் பொதுக்குழுவில் கூட்டணி குறித்து முடிவு செய்வோம்” என்றார்.
சேலம் மாவட்டம் மேட்டூர் தொகுதியில் தமிழ்க்குமாரனை நிறுத்த ராமதாஸ் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. கடந்த 2010 பென்னாகரம் இடைத்தேர்தலில் முதல் முறையாக போட்டியிட்ட தமிழ்க்குமாரன், அதிமுகவைப் பின்னுக்குத் தள்ளி இரண்டாம் இடத்தைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், வன்னியர்களுக்கு 10.5% தனி இட ஒதுக்கீடு கோரி டிசம்பர் 12 அன்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்தப்படும் என ராமதாஸ் அறிவித்துள்ளார். இந்த போராட்டத்தின் விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக டாக்டர் சுகந்தனை நியமித்துள்ளார். இது சுகந்தனின் அரசியல் பயணத்தின் முதல் பெரிய சவாலாக அமையும்.
பாமகவில் ராமதாஸ் - அன்புமணி இடையேயான குடும்பப் பிளவு, கட்சி பிளவாக மாறியுள்ளது. அன்புமணி தனது சொந்த பாமக பிரிவை உருவாக்கி, தேர்தல் கமிஷன் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார். ராமதாஸ் தலைமையிலான பிரிவு, வன்னியர் சமூகத்தின் ஆதரவைத் தக்கவைக்க முயற்சிக்கிறது. சுகந்தனின் நியமனம், ராமதாஸின் அடுத்த தலைமை தேர்வை உறுதிப்படுத்துவதாகக் கருதப்படுகிறது.
2026 தேர்தலில் பாமகவின் கூட்டணி முடிவு, இந்தக் குடும்பப் போராட்டத்தைப் பாதிக்கும் என அரசியல் கட்சிகள் கவனிக்கின்றன. ராமதாஸின் இந்த நடவடிக்கைகள், கட்சியை மீண்டும் வலுப்படுத்தும் என அவரது ஆதரவாளர்கள் நம்புகின்றனர்.
இதையும் படிங்க: மகளை களமிறக்க ராமதாஸ் மாஸ்டர் ப்ளான்!! தருமபுரியில் போட்டி! திமுக கூட்டணிக்கு தூது! அன்புமணி அப்செட்!