×
 

தேர்தல் நெருங்குவதால் கொட்டும் பரிசு மழை!!! திக்கு முக்காடும் வாக்காளர்கள்! திமுக - அதிமுக கடும் போட்டி!!

தமிழக சட்டசபை தேர்தல் வருவதால் வாக்காளர்களை கவர, தமிழகம் முழுதும், தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., நிர்வாகிகள் தங்களது தொகுதியில் பொங்கல் பரிசு என்ற பெயரில் வாக்காளர்களை 'கவனிக்க' துவங்கி உள்ளனர்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு அடுத்த மாத இறுதியிலோ அல்லது மார்ச் தொடக்கத்திலோ வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவும் நிலையில், ஆளும் தி.மு.க. மற்றும் எதிர்க்கட்சியான அ.தி.மு.க. - பா.ஜ. கூட்டணி இரு அணிகளும் வாக்காளர்களை கவரும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளன. 

இந்த பொங்கல் பண்டிகையை சாக்காக வைத்து, தமிழகம் முழுவதும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் ஆகியோர் தங்கள் தொகுதிகளில் பொங்கல் பரிசு என்ற பெயரில் பரிசுப் பொருட்கள் மற்றும் ரொக்கத்தை வாரி வழங்கி வருகின்றனர்.

தமிழக அரசு சார்பில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இந்த ஆண்டு 3,000 ரூபாய் ரொக்கம் உட்பட பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதைத் தாண்டி, தி.மு.க. சார்பில் 234 தொகுதிகளிலும் தனித்தனியாக பொங்கல் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதையும் படிங்க: இறுக்கமான முகத்துடன் சென்னை திரும்பிய விஜய்!! முடிந்தது முதற்கட்ட விசாரணை!! வெளியான முக்கிய தகவல்!

திருச்சி மேற்கு தொகுதியில் அமைச்சர் நேரு ஏற்பாட்டில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5,000 ரூபாய் மதிப்புள்ள பரிசுப் பெட்டி வழங்கப்பட்டது. இதில் இட்லி குக்கர், தட்டு, பேன்ட்-சர்ட் துணி, சேலை, எவர்சில்வர் டம்ளர், கிண்ணம், குழம்பு பாத்திரம், கரண்டி, தவா போன்ற பொருட்கள் அடங்கியுள்ளன.

சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் தனசேகரன் ஏற்பாட்டில் 3,500 பேருக்கு சேலை, அரிசி, வெல்லம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. மேலும் 40 பேருக்கு கிரைண்டர் போன்ற பொருட்களை துணைப் பொதுச்செயலர் கனிமொழி வழங்கினார்.

சென்னை துறைமுகம் தொகுதியில் அமைச்சர் சேகர்பாபு ஏற்பாட்டில் பொங்கல் பரிசுப் பைகள், சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஏற்பாட்டில் மிக்சி, கிரைண்டர் போன்றவை வழங்கப்பட்டுள்ளன.

சேலம் வடக்கு தொகுதியில் அமைச்சர் ராஜேந்திரன் மூலம் 2 கிலோ எவர்சில்வர் பாத்திரம், 200 ரூபாய் மதிப்பிலான புடவை, 500 ரூபாய் மதிப்பிலான பேன்ட்-சர்ட் அடங்கிய பரிசுத் தொகுப்பு வீடு வீடாக வழங்கப்பட்டது.

சேலம் கிழக்கு மாவட்டத்தில் ஒன்றிய, நகரச் செயலர்கள், ஓட்டுச்சாவடி முகவர்கள் உள்ளிட்ட 2,500 நிர்வாகிகளுக்கு தலா 1,500 ரூபாய் மதிப்புள்ள கேஸ் அடுப்பு உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. கட்சி நிர்வாகிகளுக்கு ரொக்கமாக ஒன்றியச் செயலர்களுக்கு 1.50 லட்சம், பேரூராட்சி செயலர்களுக்கு 50,000 ரூபாய், வார்டு-கிளை செயலர்களுக்கு 2,000 ரூபாய் வரை வழங்கப்பட்டு வருகிறது.

அ.தி.மு.க. தரப்பிலும் பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி உத்தரவுப்படி முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலர்கள், எம்.எல்.ஏ.க்கள் தங்கள் தொகுதி வாக்காளர்களுக்கு பொங்கல் பரிசுகளை வழங்கி வருகின்றனர்.

கோவை மாவட்டத்தில் தி.மு.க. சார்பில் பொங்கல் திருவிழா என்ற பெயரில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, பெண்களுக்கு கோலப்போட்டி, கயிறு இழுத்தல், ஆண்களுக்கு கிரிக்கெட், சிறுவர்களுக்கு ஓட்டப்பந்தயம், ஸ்லோ சைக்கிள் ரேஸ் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. மாவட்ட அளவில் இன்று (ஜனவரி 13) இறுதிப் போட்டிகள் நடைபெற்று, முதல் பரிசாக 30,000 ரூபாய் வரை, வெள்ளி பொங்கல் பானை, ஹாட் பாக்ஸ், சில்வர் டப்பா போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன.

தேர்தல் நெருங்கி வருவதால், இந்த பொங்கல் பண்டிகை முழுவதும் வாக்காளர்களுக்கு பரிசு மழை பொழிந்து கொண்டிருக்கிறது. பரிசுப் பொருட்களில் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் படங்கள் அச்சிடப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: டெல்லியில் கடும் குளிர் அலை: குறைந்தபட்ச வெப்பநிலை 4°C..!! நடுங்கும் மக்கள்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share