காங்கிரஸ் - பாஜக கூட்டு சதி... சி.எம். விஜய் இப்போவாவது வாயைத் திறங்க... போட்டுத்தாக்கிய பி.ஆர். பாண்டியன் ...!
மேகதாது விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் வாய் திறக்க வேண்டும் – கடலூரில் பி.ஆர். பாண்டியன் பேட்டி
தமிழ்நாட்டை அகதிகளாக்கவும், விவசாயத்தை அழிக்கவும் காங்கிரஸ் – பாஜக கூட்டுச் சதியில் ஈடுபட்டுள்ளன
காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் முயற்சி, காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்புக்கும், அதனை ஏற்று உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கும் நேரடியாக முரணானது. அந்தத் தீர்ப்பின் அடிப்படையில் மத்திய அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டு, காவிரி மேலாண்மை ஆணையமும் செயல்பட்டு வரும் நிலையில், கர்நாடக அரசு மேற்கொண்டு வரும் மேகதாது அணை கட்டும் முயற்சி சட்டவிரோதமானது. இதை தமிழக காவிரி பாசன விவசாயிகள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.
புதிதாக பொறுப்பேற்றுள்ள கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார், மேகதாது அணை திட்டத்தை முன்னெடுப்பதில் தீவிரம் காட்டி வருவது ஏற்க முடியாத நடவடிக்கையாகும். நேற்று மாநிலங்களவையில் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய ஜல்சக்தி துறை இணையமைச்சர் ராஜ் பூஷண் சௌத்ரி, உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாட்டின் அனுமதியோ, கீழ்ப்பாசன மாநிலங்களின் கருத்தோ தேவையில்லை எனக் கூறியிருப்பது உண்மைக்குப் புறம்பானது.
இதையும் படிங்க: ஜெய்ஹிந்த் ஶ்ரீமான்..? ஜெய் ஶ்ரீராம்..? ஒரு அமைச்சர் இப்படியா பேசுறது..! வன்னியரசை பந்தாடிய நயினார்.!
இதற்கு மாறாக, கடந்த 2015-ஆம் ஆண்டு அன்றைய மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது அணையை கட்ட முடியாது என்று தெளிவாக நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
மேலும், 2021-ஆம் ஆண்டு கர்நாடக முதல்வராக இருந்த பசவராஜ் பொம்மை, மேகதாது அணைக்கான வரைவுத் திட்ட அறிக்கையைத் தயாரித்து, ரூ.9,000 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் மத்திய நீர்வள ஆணையத்திடம் சமர்ப்பித்தார். அப்போது மத்திய நீர்வள ஆணையம், காவிரி மேலாண்மை ஆணையத்தின் பரிசீலனைக்கு அனுப்பியது.
அதனைத் தொடர்ந்து, 2022-ஆம் ஆண்டு காவிரி மேலாண்மை ஆணையத்தில் இந்த விவகாரம் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, தமிழ்நாடு, கேரளம் மற்றும் புதுச்சேரி ஆகிய கீழ்ப்பாசன மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், எந்த முடிவும் எடுக்காமல் மீண்டும் மத்திய நீர்வள ஆணையத்திற்கே திருப்பி அனுப்பப்பட்டது.
இவ்வாறு சட்டரீதியான நடவடிக்கைகள் நிலுவையில் இருக்கும் நிலையில், மத்திய இணையமைச்சரின் தற்போதைய கருத்து காங்கிரஸ் மற்றும் பாஜக இணைந்து செயல்படுகின்றன என்ற சந்தேகத்தை வலுப்படுத்துகிறது.
தமிழ்நாட்டின் விவசாயத்தையும், காவிரி டெல்டா மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் வகையில் காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டுச் சதியில் ஈடுபட்டுள்ளன என்பதற்கான வெளிப்பாடாகவே இந்த நடவடிக்கைகள் உள்ளன.
மத்திய இணையமைச்சரின் பதிலைத் தொடர்ந்து, டி.கே. சிவகுமார் காங்கிரஸ் தேசியத் தலைமையினரைச் சந்தித்து மேகதாது விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தியதுடன், கர்நாடகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் மற்றும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோருடன் ஆலோசனைகளையும் மேற்கொண்டுள்ளார்.
இதனால், மேகதாது அணைத் திட்டத்தை முன்னெடுக்க காங்கிரஸ் மற்றும் பாஜக இணைந்து செயல்படுகின்றன என்ற சந்தேகம் மேலும் வலுப்பெறுகிறது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி ஆளும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள போதும், இந்த விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் இதுவரை எந்தத் தெளிவான கருத்தையும் தெரிவிக்காதது தமிழக விவசாயிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, முதலமைச்சர் விஜய் உடனடியாக தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும். மேலும், மேகதாது அணைத் திட்டத்திற்கு எதிராக அனைத்து அரசியல் கட்சிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளை அழைத்து அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தி, மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக உரிய சட்ட மற்றும் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக காவிரி பாசன விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர். பாண்டியன் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: பிரதமரின் செல்ஃபி வீடியோ முடக்கம்..!! தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்ட மெட்டா..!!