பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு! மத்திய கல்வி அமைச்சகத்தில் புதிய அத்தியாயம்! முதல் நாளே அதிகாரிகளுடன் ஆலோசனை!
மத்திய கல்வித்துறையின் புதிய அமைச்சராக பிரகலாத் ஜோஷி ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 26) பொறுப்பேற்றுள்ளார்.
மத்திய கல்வித்துறையின் புதிய அமைச்சராக மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 26) அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட அரசியல் அழுத்தத்தைத் தொடர்ந்து முன்னாள் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜிநாமா செய்த நிலையில், கல்வித்துறை பொறுப்பு பிரகலாத் ஜோஷிக்கு வழங்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு குற்றச்சாட்டுகள் தொடர்பாக நாடு முழுவதும் மாணவர்கள், மாணவர் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் போராட்டங்களில் ஈடுபட்டன. குறிப்பாக தில்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டங்கள் அரசியல் ரீதியாகவும் கவனம் பெற்றன. இதையடுத்து, கல்வித்துறை அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
பிரதமர் நரேந்திர மோடியின் பரிந்துரையை தொடர்ந்து, குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன், மத்திய நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சராக இருந்த பிரகலாத் ஜோஷிக்கு கல்வித்துறை கூடுதல் பொறுப்பாக ஒதுக்கப்பட்டது.
இதையும் படிங்க: அதிதீவிர ஆர்.எஸ்.எஸ் பின்புலம்.! யார் இந்த பிரகலாத் ஜோஷி? புதிய கல்வி அமைச்சரின் முழு பின்னணி தெரியுமா.?
இதையடுத்து, மத்திய கல்வி அமைச்சகத்தில் புதிய அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்றார். பொறுப்பேற்ற முதல் நாளிலேயே கல்வித்துறை சார்ந்த உயர் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். கல்வித்துறையில் நிலவும் முக்கிய பிரச்னைகள், தேர்வு முறைகள், புதிய கல்விக் கொள்கை செயல்பாடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.
பிரகலாத் ஜோஷி கர்நாடகாவைச் சேர்ந்த மூத்த பாஜக தலைவராவார். நீண்ட காலமாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வரும் இவர், மத்திய அரசில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். தற்போது கல்வித்துறையுடன் சேர்த்து நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகிய துறைகளையும் அவர் கவனித்து வருகிறார்.
நீட் விவகாரம், போட்டித் தேர்வுகளின் நம்பகத்தன்மை, மாணவர்களின் எதிர்பார்ப்புகள் ஆகியவை முக்கிய விவாதமாக உள்ள நிலையில், கல்வித்துறையை பிரகலாத் ஜோஷி எவ்வாறு வழிநடத்தப் போகிறார் என்பது அரசியல் மற்றும் கல்வி வட்டாரங்களில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: புதிய கல்வி அமைச்சராக பிரகலாத் ஜோஷி கூறிய முக்கிய தகவல்! கல்வித்துறையில் அடுத்த கட்ட நடவடிக்கை!